ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெல்பர்னில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களுக்கு 443 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. அதன்பின் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இரண்டாம் இன்னிங்ஸை விளயாடிய இந்திய அணி எட்டு விக்கெட்கள் இழந்து 106 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாம் இன்னிங்ஸையும் டிக்ளர் செய்து, ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி வந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 261 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 4வது மற்றும் தொடரின் இறுதி போட்டி சிட்னியில், வரும் ஜனவரி மாதம் 3-ம் தேதி நடக்கிறது. 37 ஆண்டுகளுக்கு பிறகு மெல்பர்னில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.