Skip to main content

சரித்திரம் படைக்கும் முனைப்புடன் விராட் கோலியின் இளம்படை...!

Published on 22/01/2019 | Edited on 22/01/2019

உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. பெரும்பாலான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்து அல்லது இந்தியா கோப்பையை வெல்லும் என்று கருதுகின்றனர். நம்பர் 1 அணி, நல்ல ஃபார்மில் உள்ள பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள், சொந்த நாட்டில் நடைபெறும் உலகக்கோப்பை என இங்கிலாந்துக்கு சாதகமானவை அதிகம் உள்ளன. அதேசமயம் உலகின் சிறந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், பவுலிங்கில் மிரட்டும் பும்ரா என இந்தியாவும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக உருவெடுத்துள்ளது.  

 

 

ii

 

வெற்றிகரமான ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை தொடர்ந்து நியூசிலாந்தில் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்தியா விளையாடவுள்ளது. கடைசியாக நியூசிலாந்து அணி விளையாடிய 19 ஒருநாள் போட்டிகளில் 14 போட்டிகளில் வென்று பலம்பொருந்திய அணியாக உள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என இருபெரும் அணிகளை அதன் சொந்த மண்ணில் வென்ற நம்பிக்கையுடன் இந்தியா நியூசிலாந்து அணியை சந்திக்கிறது.

 

உலகக் கோப்பை போட்டிகளுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் அணியின் காம்பிநேஷனை தேர்வு செய்ய இந்த தொடர் உதவும். இரு அணிகளிலும் இன்னும் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் களமிறங்கும் வீரர்கள் முடிவு செய்யப்படமால் உள்ளனர். அதேசமயம் இரு அணிகளும் உலகின் சிறந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை தன்வசம் வைத்துள்ளது.

 

குப்தில், வில்லியம்சன், டெய்லர் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். ரோஸ் டெய்லர், சமீபத்தில் இலங்கைக்கு எதிராக நடந்த தொடரில் 3 போட்டிகளில் 281 ரன்கள், 93.67 சராசரி வைத்துள்ளார். கடந்த ஆண்டு  10 இன்னிங்ஸ்களில்   639 ரன்கள் மற்றும் 91.29 சராசரி. வில்லியம்சன் மற்றும் குப்திலும் 45+ சராசரி வைத்துள்ளனர். வில்லியம்சன் நியூசிலாந்தில் இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகளில் 361 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங் சராசரி 72.00.

 

முன்ரோ, நிக்கோலஸ் ஆகியோர் அதிரடியில் மிரட்ட தயாராக உள்ளனர். இலங்கை தொடரில் நிக்கோலஸ் 3 போட்டிகளில் 132 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 171 ரன்கள் குவித்துள்ளார். ஆல்-ரவுண்டர்கள் நிறைந்த அணியாக நியூசிலாந்து உள்ளது. போல்ட், சவுதி, ஹென்ரி என ஃபாஸ்ட் பவுலிங்கும்,  மிட்செல் சேன்ட்னர், சோதி என ஸ்பின் பவுலிங்கும் வலுவாக உள்ளது. 

 

தற்போது முடிந்த இலங்கை தொடரில் 3 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி 300+ ரன்களை எடுத்தது. இதனால் இந்த தொடரிலும் ரன்கள் அதிகம் விளாசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனி நியூசிலாந்தில் 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 541 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங் சராசரி 90, ஸ்ட்ரைக் ரேட் 91. 

 

கடைசியாக விளையாடிய 5 தொடர்களில் கோலியின் பேட்டிங் சராசரி 51, 151, 63, 186, 88. ஒப்பனிங்கில் சர்மா, தவான் ஜோடி சிறப்பாக விளையாடி வருகிறது. மிடில் ஆர்டர் பேட்டிங்கில் தோனி மற்றும் கார்த்திக் நல்ல ஃபார்மில் உள்ளனர். கேதர் ஜாதவ் மற்றும் ராயுடு ஆகியோரில் ஒருவர் மட்டுமே அணியில் விளையாட வாய்ப்புள்ள நிலையில் இந்த தொடரின் மூலம் இருவரில் யார் அணியில் இடம்பெறுவார் என்பது தீர்மானிக்கப்படும். 

 

ii

 


குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா ஆகிய ஸ்பின் பவுலர்கள் கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக விளையாடியுள்ளனர். புவனேஷ்வர் குமார், முகமது ஷமியுடன் விளையாடும் மூன்றாவது பவுலர் யார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

 

இந்திய அணி நியூசிலாந்திற்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நியூசிலாந்தில் 2009-ஆம் ஆண்டுதான் வென்றுள்ளது. கடைசியாக நியூசிலாந்தில் அந்த அணிக்கு எதிராக நடைபெற்ற 6 போட்டிகளில் 5 போட்டிகளில் இந்திய அணி தோல்வியை கண்டுள்ளது. ஒரு போட்டி டை ஆனது. அதனால் வெற்றிபெறும் முனைப்புடன் களமிறங்குகிறது இந்திய அணி. 

 

2015 உலகக்கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் 70% வெற்றி சதவீதத்துடன் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. இந்தியா 66%, தென் ஆப்பிரிக்கா 62%,  நியூசிலாந்து 60% சதவீத வெற்றி பெற்றுள்ளது. தற்போது ஃபார்மில் உள்ள இந்தியாவும், நியூசிலாந்தும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது இரு அணிகளுக்கும் சவாலாக இருக்கும். தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியது இந்திய அணி. நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்திய அணி 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 18 தோல்வி. இந்த வரலாற்றை மாற்றி நியூசிலாந்திலும் இந்திய அணி சரித்திரம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.