ஆசியா கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்திய அணி இலங்கையுடன் மோத இருக்கிறது.
2022ம் ஆண்டுக்கான ஆசியா கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெறுகிறது. 6 அணிகள் இரு பிரிவுகளாக மோதும் இந்த தொடரில் லீக் ஆட்டங்கள் முடிந்து தற்போது சூப்பர் 4 சுற்று நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் , இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில் இன்று சூப்பர் 4 சுற்றின் 3 வது ஆட்டமாக இந்தியாவும் இலங்கையும் மோத உள்ளன. இதற்கு முன் பாகிஸ்தானுடன் இந்திய அணி தோல்வியை தழுவியதால் இறுதிப்போட்டிக்கு முன்னேற இன்று கட்டாய வெற்றி பெற்றாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசிய கோப்பையில் முதல் இரண்டு போட்டிகளில் வென்று வீறுநடை போட்ட இந்தியா மூன்றாம் போட்டியில் பாகிஸ்தானுடன் போராடி தோற்றதன் மூலம் இனி நடைபெற இருக்கும் இரு போட்டிகளிலும் கட்டாய வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் உள்ளது. மறுபுறம் இலங்கை சூப்பர் 4 சுற்றில் அதிக ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மாவும் கே.எல்.ராகுலும் சொற்ப ரன்களில் வெளியேறுவது அணிக்கு பெரும் பின்னடைவு. கோலி பழைய ஆட்டத்திற்கு திரும்பி இந்திய மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார். அவரிடம் இன்றும் பெரிய இன்னிங்ஸ் எதிர்பார்க்கலாம். பந்துவீச்சை பொறுத்தவரை அர்ஷிதீப் சிங் கடைசி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசுவது ஆறுதல் தான் என்றாலும் மிடில் ஓவர்களில் இந்திய அணி அதிக ரன்களை விட்டுக்கொடுப்பதும் பாகிஸ்தான் அணியுடனாட போட்டியில் 6 முதல் 15 ஓவர்களில் மட்டும் அந்த அணி 70 ரன்களுக்கும் அதிகமாக அடித்தது குறிப்பிடத்தக்கது. சூழல் மன்னன் சாஹல் தேவைப்படும் நேரத்திலெல்லாம் விக்கெட் எடுக்கும் தன்னுடைய பாணிக்கு இன்னும் திரும்பவில்லை.
இலங்கை அணியை பொறுத்தவரை அவர்கள் இதுவரை ஆடியது பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானுடன் தான். இன்று இரவு நடக்கும் போட்டியில் தான் அந்த அணியின் முழுமையான பலம் வெளிப்படும். கேப்டன் ஷனகா, குசல் மென்டிஸ், பனுகா ராஜபக்சே, பந்து வீச்சில் ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, தீக்ஷனா உள்ளிட்டோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அந்த அணிக்கு பலம்.
இந்திய அணி உத்தேச பட்டியல்: ராகுல், ரோகித் சர்மா , விராட் கோலி, சூர்யகுமார், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, ஹர்திக் , புவனேஷ்வர்குமார், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப்சிங், யுஸ்வேந்திர சாஹல்.
இலங்கைஅணி உத்தேச பட்டியல்: நிசாங்கா, குசல் மென்டிஸ், சாரித் அசலங்கா, குணதிலகா, தசுன் ஷனகா (கேப்டன்), பானுகா ராஜபக்சே, ஹசரங்கா, சமிரா கருணாரத்னே, தீக்ஷனா, அசிதா பெர்னாண்டோ, மதுஷனகா