இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இந்தியாவின் ராசியான கேப்டன்களின் லிஸ்டிலும் முக்கியமானவர். பல வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. அந்த வகையில் தோனியின் திறமை மீது இவர் வைத்திருந்த நம்பிக்கையும், அதனால் உருவாக்கப்பட்ட வரலாறு குறித்தும் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் கங்குலி.
2004ஆம் ஆண்டில்தான் தோனி முதன்முதலில் இந்திய அணியில் இடம்பிடித்தார். வங்காளதேசம் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் அவர் ஏழாவது இடத்தில்தான் இறங்குவதற்கு அனுமதிக்கப்பட்டார். அது அவருக்கு அசவுகரியமான சூழலை ஏற்படுத்தியது உலகறிந்தது. அதன்பின்னர் பாகிஸ்தான் உடனான போட்டியில் மீண்டும் தோனிக்கு இடம் கிடைத்தது. முதல் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றபோது, தோனியிடம் நல்ல திறமை இருக்கிறது. அதனால், அதை சோதித்துப் பார்த்தாக வேண்டும். சரியோ, தவறோ அவரை 3-ஆவது இடத்தில் களமிறக்கி சோதித்துப் பார்க்கவேண்டும் என யோசித்துள்ளார். அந்த சமயத்தில் 3-ஆவது இடத்தில் கங்குலிதான் களமிறங்குவார்.
இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தபோது, 7-வது இடத்தில்தானே இறங்கப்போகிறோம் என்ற நினைப்பில், ஷாட்ஸ் அணிந்துகொண்டு இருந்த தோனியிடம் சென்ற கங்குலி, நீ மூன்றாவது இடத்தில் இறங்கு என்று பணித்தாராம். ஆச்சர்யப்பட்ட தோனி.. அது உங்கள் இடம்தானே எனக்கேட்க, நான் நான்காவது இடத்தில் இறங்கிக் கொள்கிறேன் என்றாராம். அன்றைய போட்டியில் தோனி அதிரடியாக ஆடி 148 ரன்கள் குவித்தார். 15 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அதில் அடக்கம். அந்தப் போட்டியில் இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற, தோனி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.