Skip to main content

பெஸ்ட் பேட்டிங், மாஸ் பவுலிங்... இந்தியாவுக்குத்தான் உலகக்கோப்பை!!!

Published on 03/12/2018 | Edited on 03/12/2018
akashchopra
                                                                                    ஆகாஷ் சோப்ரா


2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்க உள்ள உலகக் கோப்பையில் இந்தியாதான் வெற்றிபெறும் என இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
 

"இந்தியஅணிக்கு சாதகமாக நிறைய விஷயங்கள் உள்ளன. பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. மிகச்சிறந்த சில பேட்ஸ்மேன்கள்கிடைத்துள்ளனர்.இங்கிலாந்தில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி வென்றது. அங்கு 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. எனவே, நாம் உலகக்கோப்பையை வெல்ல முடியும்” என்று ஐசிசி உலக கோப்பை டிராபி டூர் நிகழ்ச்சியின்போது அவர் தெரிவித்துள்ளார்.
 

ஆகாஷ் சோப்ரா மட்டுமல்ல. இதற்கு முன்னரும் பல முன்னாள் இந்திய வீரர்களும், சில வெளிநாட்டு வீரர்களும் இதே கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்துகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது கோலி தலைமையிலான அணியின் சமீப காலங்களில் பிரமிக்க வைக்கும் ஆட்டங்கள்தான்.
 

2017 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் இந்திய அணி 49 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 35 வெற்றிகளை பெற்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற 13 ஒருநாள் தொடர்களில் 11 தொடர்களை வென்றுள்ளது. 2017 சாம்பியன்ஸ் டிராபியில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் 1 –2 என தோற்றது. இந்த இரண்டு தொடர்களை தவிர, மற்ற அனைத்து தொடர்களையும் இந்திய அணி வென்றுள்ளது கவனிக்கத்தக்கது.
 

ரோகித் சர்மா, தவான், கோலி, தோனி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ்/சஹால், புவனேஷ் குமார் மற்றும் பும்ராஹ் ஆகியோர் அணியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. ஆனால் நான்காம் மற்றும் ஆறாம் இடத்தில் விளையாடும் வீரர், மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் ஆகிய இடங்களில் யார் விளையாடுவார்கள் என்பது கேள்விகுறியாகவே உள்ளது. இந்த இடத்தை யார் பிடிப்பார்கள் என்பது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில்தெரியவரும்.
 

நான்காவது இடத்திற்கு ராயுடுவிற்கு வாய்ப்புகள் அதிகம். இருப்பினும் அதே இடத்திற்கு கே.எல்.ராகுல், மனிஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், ரஹானே ஆகியோரும் முயற்சி செய்து வருகின்றனர். ஆறாவது இடத்திற்கு கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, ரிஷப் பண்ட், ஜடேஜா, அக்சர் படேல், குருனல் பாண்டியா ஆகியோரில் ஒருவர் இடம்பெறுவார். தாகூர், கலீல் அஹமது, உமேஷ் யாதவ், சமி, தீபக் சஹார், முஹமது சிராஜ் ஆகியோரில் ஒருவர் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இடம்பெற வாய்ப்புண்டு.
 

அம்பதி ராயுடு


இந்த நிலையில் "நான்காவது இடத்தில் விளையாட நாம் பல பேட்ஸ்மேன்களை முயற்சித்தோம். ஆனால் அம்பதி ராயுடு மட்டுமே அதற்கான திறன்களை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அவர் அந்த இடத்தை நிரப்பியுள்ளார் என்று நினைக்கிறேன்.” என்று ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நீண்டநாள் பிரச்சனையாக உள்ள நான்காவது இடம் பற்றி சோப்ரா கருத்து கூறியுள்ளார்.
 

வரும் ஐபிஎல் போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்த கோலியின் பரிந்துரை பற்றி இந்திய கிரிக்கெட் வாரியம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் ஆகாஷ்சோப்ரா தெரிவித்துள்ளார். மேலும் பேட்ஸ்மேன்களையும் இதில் கணக்கில் எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
 

"உலகக் கோப்பையை வெல்லும் அனைத்து தகுதிகளையும் கோலி தலைமையிலான அணிகொண்டுள்ளது.” என டேரன் சமியும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை இந்தியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் வலுவாக உள்ளன. அடுத்த வருடம்  மே 30–ஆம் தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் போட்டியில் இங்கிலாந்தும், தென் ஆப்ரிக்காவும் மோதுகின்றன. ஜூன்5-ல் இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது.