Skip to main content

பிஃபா மகளிர் உலகக் கோப்பை; முதல் போட்டியிலேயே வரலாறு படைத்த நியூசிலாந்து 

Published on 21/07/2023 | Edited on 21/07/2023

 

FIFA Women's World Cup; New Zealand made history in the first match

 

பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நேற்று கோலாகலமாகத் தொடங்கியது.  2023 பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து  9வது தொடர்  நேற்று ( ஜூலை 20) தொடங்கி ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  இந்த மகளிர் உலகக் கோப்பை போட்டியை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

 

இந்த போட்டியில், போட்டியை நடத்தும் நாடுகள் உள்பட  நடப்பு சாம்பியன் அமெரிக்கா, முன்னாள் சாம்பியன்கள் நார்வே, ஜெர்மனி, ஜப்பான், ஆசிய கண்டத்தில் இருந்து பிலிப்பைன்ஸ், சீனா, வியட்நாம், தென் கொரியா உள்பட 32  நாடுகளைக் கொண்ட அணிகள்  கலந்து கொள்கின்றன. மேலும், இந்த அணிகள் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பெற்று உள்ளன. இந்த பிரிவுகளில் லீக் சுற்று ஆட்டங்கள் இன்று முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 48 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

 

இந்த லீக் சுற்றில் முதல் இரு இடங்களில் வெற்றி பெறும் அணிகள் அடுத்த சுற்றான நாக் அவுட் சுற்றுகளுக்கு தகுதி பெறும்.  அந்த வகையில், இந்த நாக் அவுட் சுற்றானது ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த சுற்றின் முடிவில் எட்டு அணிகள் கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும். மேலும், இந்த கால் இறுதி ஆட்டங்கள் ஆகஸ்ட் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெறும். அதே போல், அரை இறுதி ஆட்டங்கள் ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.

 

அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 19 ஆம் தேதி அன்று 3வது இடத்துக்கான ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த போட்டியின் இறுதிச் சுற்றானது ஆகஸ்ட் 20 ஆம் தேதி சிட்னி ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெற உள்ளது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் உள்ள ஆறு மைதானங்களில் இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில், மகளிர் கால்பந்து  போட்டியின் தொடக்க நாளான நேற்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன. அதில் முதல் லீக் போட்டியில் ‘ஏ’ பிரிவை சேர்ந்த நியூசிலாந்து - நார்வே  என இரு அணிகள் மோதியது. இந்த போட்டி ஆக்லாந்து ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. அதில்,  1-0 என்ற புள்ளியில் நார்வே அணியைத் தோற்கடித்து நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இது மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் நியூசிலாந்து அணி பெற்ற முதல் வெற்றியாகும். அதனைத் தொடர்ந்து லீக் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் ‘பி’ பிரிவைச் சேர்ந்த  ஆஸ்திரேலியா - அயர்லாந்து என இரு அணிகள் மோதியது. அதில்  அயர்லாந்து அணியை 1-0 என்ற புள்ளியில் தோற்கடித்து ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

 

லீக் போட்டியின் இரண்டாம் நாளான இன்று (21ம் தேதி) இரண்டு ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. அதில், நியூசிலாந்தில் உள்ள போர்சித் பார் மைதானத்தில் ‘ஏ’ பிரிவைச் சேர்ந்த பிலிப்பைன்ஸ் - சுவிட்சர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் சுவிட்சர்லாந்து ஒரு கோல் அடித்து முன்னிலையில் உள்ளது. மற்றொரு ஆட்டத்தில், ‘பி’ பிரிவை சேர்ந்த நைஜிரியா - கனடா அணிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பேர்ன் நாற்சதுர விளையாட்டு மைதானத்தில் மோதின. இதில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.