ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றுள்ளார்.
18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனிஷியாவின் ஜகர்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் துப்பாக்கிச்சூடு பிரிவில் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். மல்யுத்தப் போட்டியில் ஆடவர் 65 கிலோ பிரிவில் பஜ்ரங் பூனியா தங்கம் வென்றார். அதேபோல், மகளிர் 50 கிலோ எடைப்பிரிவில் வினேஷ் போகாத் தங்கம் வென்றார். இந்நிலையில், இந்தியாவின் துப்பாக்கி சுடும் வீரர்களில், 10மீ பிரிவில் களமிறங்கிய 16 வயது வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மிகவும் சிறிய வயதினராக இருந்தாலும், சவுரப் சவுத்ரி மிக நேர்த்தியாக விளையாடியதாகவும், பதற்றப் பட்டதாகவே தெரியவில்லை என்றும் பலரும் பாராட்டியுள்ளனர். சவுரப் சவுத்ரி உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரூட்டில் உள்ள கலீனா என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தான் எந்தவித அழுத்தத்தையும் விளையாட்டின்போது உணரவில்லை எனக்கூறியுள்ள சவுரப் சவுத்ரி, தொடர் பயிற்சியில் ஈடுபட்டதால் தனக்குப் பிடித்த விவசாயத் தொழிலில் ஈடுபட முடியவில்லை என வருத்தம் கொள்கிறார். ஆசிய துப்பாக்கி சுடும் போட்டிகளின் வரலாற்றில் இதுவரை ஐந்து முறை மட்டுமே இந்தியா தங்கம் வென்றுள்ளது. அதில் சவுரப் சவுத்ரி ஐந்தாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.