Skip to main content

ரசிகர்கள் கால்பந்தாட்டத்திற்கும் ஆதரவு தரவேண்டும்! - விராட் கோலி 

Published on 03/06/2018 | Edited on 03/06/2018

ரசிகர்கள் எல்லா விளையாட்டுகளுக்கும் ஊக்கமும், உற்சாகமும் தந்து ஆதரவளிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

Virat

 

இந்திய கால்பந்தாட்ட அணியின் கேப்டன் சுனில் ஷேத்ரி, உலக கால்பந்தாட்ட அணிகள், கிளப்புகளைப் போல் இந்தியர்கள் சொந்த நாட்டு அணிக்கும் ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். அவர் வெளியிட்ட வீடியோ காட்சியில், ‘உலகின் தலைசிறந்த அணிகள், கிளப்புகளைக் கொண்டாடும் இந்திய கால்பந்தாட்ட ரசிகர்களே.. எங்கள் விளையாட்டையும் கொஞ்சம் பார்க்க வாருங்கள். எங்களிடம் குறை இருக்கலாம். நாங்கள் அவர்களோடு ஒப்பிடும் அளவுக்கு இல்லாமல் போகலாம். ஆனால், ஒருநாள் எல்லாமே மாறும். மாற்றத்தை ஏற்படுத்த எங்களுக்கு உதவுங்கள். மைதானத்திற்கு வாருங்கள். எங்கள் விளையாட்டைப் பாருங்கள். எங்களை விமர்சியுங்கள், எங்களை நோக்கி கத்துங்கள், திட்டுங்கள், எங்கள் குறைகளைப் பற்றி விவாதியுங்கள். நீங்கள் நினைத்தால் மிகப்பெரிய மாற்றம் பிறக்க வாய்ப்பிருக்கிறது’ என உருக்கமாக தெரிவித்திருந்தார்.
 

இந்நிலையில், சுனில் ஷேத்ரியின் இந்த வேண்டுகோளுக்கு பலம் சேர்க்கும் விதமாக, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ‘ரசிகர்கள் கிரிக்கெட்டைப் போல், மற்ற விளையாட்டுகளைப் போல் கால்பந்தாட்டத்திற்கும் முக்கியத்துவம் தரவேண்டும். அவர்கள் நிறையவே முன்னேறியிருக்கிறார்கள். அவர்களது முன்னேற்றம் உங்கள் பங்கெடுப்பின் மூலமாகவே முழுமையடையும். அவர்கள் விளையாடும்போது மைதானத்திற்கு சென்று ஒத்துழைப்பு தாருங்கள். இந்தியாவின் விளையாட்டு கலாச்சாரம் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் நமக்கிருக்கிறது. விளையாட்டில் தலைசிறந்த நாடாக இந்தியா மிளிர, நாம் எல்லா விளையாட்டுகளையும் நேசிக்கவும், ஆதரவளிக்கவும் வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனால், நாம் கால்பந்தாட்டத்திற்கும் ஆதரவளிப்போம்; என பேசும் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இதேபோல், சுரேஷ் ரெய்னா போன்ற பலரும் இந்திய கால்பந்தாட்ட அணிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.