Skip to main content

புதிய தலைமை டெல்லியின் தோல்வியை வென்றெடுக்குமா? - ஐ.பி.எல். போட்டி #26

Published on 27/04/2018 | Edited on 27/04/2018

நேற்றுதான் தொடங்கியது போல் இருக்கிறது. அதற்குள் 25 போட்டிகள் முடிந்துவிட்டன. ஐ.பி.எல். சீசன் 11ன் 26ஆவது போட்டி  இன்று டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் வைத்து இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

 

IPL

 

ஐ.பி.எல். வரலாற்றில் டெல்லி அணிக்கு தோல்வி ஒன்றும் புதிதல்ல. ஆனால், தோல்வியைக் காரணம்காட்டி அந்த அணியின் கேப்டன் ஒருவர் பதவியில் இருந்து விலகுவதுதான் ரொம்பப் புதிது. கேப்டனாக இருந்த கவுதம் கம்பீர் விலகிக்கொள்ள, அந்தப் பொறுப்பிற்கு ஸ்ரேயாஸ் ஐயர் வந்திருக்கிறார். துடிப்பும், துள்ளலும் மிக்க ஒரு இளம் வீரர் கேப்டனாக பொறுப்பேற்கும்போது, இமயமலை அளவுக்கு சுமையையும் சேர்த்தே சுமக்கவேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

 

புதிய கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர் செட்டில் ஆவதற்குள் மோதப்போவதோ கொல்கத்தா எனும் பலம்வாய்ந்த அணியுடன். இந்த சீசனில் ஓரளவுக்கு சுமாராக இருந்தாலும், அந்த அணி எந்த நேரமும் தொடரின் போக்கை மாற்றக்கூடியது. டெல்லி அணியோடு ஒப்பிடும்போது அந்த அணியின் ட்ராக் ரெக்கார்ட் வலுவாக இருக்கிறது.(எந்த அணிக்குத்தான் இருக்காது?) இதுவரை இந்த இரண்டு அணிகளும் மோதியுள்ள 20 போட்டிகளில் 13 - 7 என கொல்கத்தா அணியே முன்னிலையில் உள்ளது. டெல்லியில் இந்த இரண்டு அணிகளும் கடைசியாக மோதிய 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே டெல்லி அணி வெற்றிபெற்றுள்ளது.

 

டாப், மிடில் என எல்லா ஆர்டர்களிலும் நிறைய மாறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது டெல்லி அணி. அதன் முதல்படியாக கேப்டன் மாறியிருக்கிறார். ஏற்கெனவே, காயம்பட்டு வந்திருக்கும் கொல்கத்தா அணி அடுத்த வெற்றிக்கு அடிபோடும். எப்போதும் காயத்துடன் இருக்கும் டெல்லி அணி அதைத் தெரிந்தே இருக்கும். புதிய தலைமையுடன் களமிறங்குகிறது. கொல்கத்தாவோடு சேர்ந்து தோல்வியையும் டெல்லி அணி வென்றெடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.