இந்தியாவில் கரோனா அலையைக் கட்டுப்படுத்த, தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்றுவருகின்றன. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மே ஒன்றாம் தேதியிலிருந்து தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய அரசு அனுமதியளித்த நிலையில், அதனைத்தொடர்ந்து பல்வேறு விளையாட்டு வீரர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுவருகின்றனர்.
அந்தவகையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், அண்மையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். மேலும், தான் தடுப்பூசி செலுத்திக்கொண்டபோது எடுத்த புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட அவர், அனைவரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்தநிலையில், குல்தீப் யாதவ் தடுப்பூசி செலுத்திக்கொண்டது தொடர்பாக சர்ச்சை வெடித்தது. ஜாகேஷ்வர் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அவர் பதிவு செய்ததாகவும், ஆனால் மருத்துவமனைக்கு வராமல் கெஸ்ட் ஹவுஸில் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகவும் சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கூடுதல் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டுக்கு கான்பூர் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டுள்ளார்.