Skip to main content

சென்னை அணி வீரருக்கு மீண்டும் கரோனா உறுதி...

Published on 16/09/2020 | Edited on 16/09/2020

 

csk players

 

 

கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் தொடர் வரும் 19-ம்  தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை அணி மும்பை அணியுடன் மோதுகிறது. அதற்கான பயிற்சியில் இரு அணி வீரர்களும் தீவிரமாக உள்ளனர். கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலில் இத்தொடர் நடைபெறுவதால் பிசிசிஐ கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியிருக்கிறது. அதன்படி அமீரகம் சென்றடைந்த வீரர்கள் அனைவரும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கரோனா தொற்று இல்லையென்பது உறுதி செய்யப்பட்ட பின் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

 

இந்த முதற்கட்ட பரிசோதனையில் சென்னை அணியைச் சேர்ந்த ஒரு பந்துவீச்சாளார், உதவியாளர் உட்பட 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து இவ்வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் சென்னை அணியால் திட்டமிட்டபடி ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. பிற வீரர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின் மற்ற வீரர்களைக் கொண்டு சென்னை அணி பயிற்சியில் இறங்கியது. 

 

முதலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தீபக் சஹாருக்கு மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் போது அவருக்குத் தொற்று இல்லை என்பது உறுதியானது. பின் பிசிசிஐ அனுமதியுடன் அவர் சென்னை அணி வீரர்களுடனான பயிற்சியில் கலந்து கொண்டார். தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த மற்றொரு இளம் வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் மீண்டும் கரோனா பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதனையடுத்தது அவர் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.