Skip to main content

நெதர்லாந்து அணிக்கு பந்து வீசத் தேர்வான சென்னை டெலிவரி பாய் !

 

Chennai delivery boy selected to bowl for Netherlands team

 

கிரிக்கெட் உலகக் கோப்பை 2023ல் நெதர்லாந்து அணிக்காக நெட் பயிற்சியில் பந்துவீச சென்னையை சேர்ந்த உணவு டெலிவரியில் பணிபுரியும் நபர் தேர்வாகியுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

இந்தியா தலைமையேற்று நடத்தும் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023, அடுத்த மாதம் அக்டோபர் 5 தொடங்கி நவம்பர் 19 வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்கிறது. எனவே, கிரிக்கெட் உலகக் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் பதினைந்து நாட்களே இருக்கும் நிலையில், தினம் தினம் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.

 

சென்னையைச் சேர்ந்த லோகேஷ் குமார் வயது (29) தனது கல்லூரி படிப்பை 2018-ல் முடித்துள்ளார். பின், கிரிக்கெட்டில் முழு ஆர்வம் காட்டத் தொடங்கிய லோகேஷ், ஒரு பக்கம் தினசரி தேவைகளையும் பூர்த்தி செய்தாக வேண்டிய சூழலுக்கு ஆளானார். அதனால், உணவு டெலிவரி செய்து கொண்டு வார இறுதியில் கிரிக்கெட் விளையாடும் பழக்கத்தை வைத்துள்ளார். இப்படி 2018 முதல் கிரிக்கெட் - உணவு டெலிவரி என லோகேஷின் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. இப்படியாக ஒரு நாள் நெதர்லாந்து அணி விளம்பரம் ஒன்றை வெளியிட்டு. அதில், " ஸ்பின் பயிற்சி பவுலர்கள் தேவை" என்பது போன்று விளம்பரம் செய்துள்ளது. 

 

இதனை தற்செயலாக லோகேஷ் பார்த்து பின்பு அதற்கு அணுகியும் உள்ளார். தொடர்ந்து நெதர்லாந்து கிரிக்கெட் நிர்வாகம் இந்தியாவில் 10,000 பவுலர்களுக்கு மொபைல் வீடியோ மூலம் தகுதி தேர்வு நடத்தியுள்ளது. அதில், தேர்வான நான்கு வீரர்களில் லோகேஷும் ஒருவர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணம் குறித்தும், தனது வாழ்க்கை சம்பவங்கள் குறித்தும் சமீபத்தில் லோகேஷ் பேசியிருந்தார். அவர் கூறுகையில், "இந்த நேரம் தான் என் கிரிக்கெட் பயணத்தில் மிக முக்கியமான தருணமாக நான் கருதுகிறேன். ஏனென்றால், நான் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷேன் நடத்தும் மூன்றாம் டிவிஷன் ஆட்டத்தில் கூட விளையாடியது இல்லை. காந்த நான்கு வருடங்களாக ஐந்தாவது டிவிஷனில் தான் விளையாடி வருகிறேன். தற்போது நடந்து வரும் சீசனில் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்காக நான்காவது டிவிஷனில் விளையாட பதிவு செய்துள்ளேன்.

 

இந்நிலையில், நெதர்லாந்து அணியின் நெட் பந்து வீச்சாளராக தேர்வானது, என் திறமை இறுதியாக அங்கீகரிக்கப்பட்டு விட்டதாக உணர்கிறேன். மேலும், என்னை நெதர்லாந்து அணி வீரர்கள் மிகுந்த மரியாதையுடன் வரவேற்றனர். பின், வலைப்பந்து வீச்சாளர்கள் அறிமுக விழாவும் நடத்தினார்கள். அப்போது சில வீரர்கள் என்னிடம்," நீங்கள் தயங்க வேண்டாம்... இது உங்கள் அணி போல நினைத்துக்கொள்ளுங்கள்" என மகிழ்ச்சியுடன் அணுகினார்கள்" என்றார் லோகேஷ்.

 

தொடர்ந்து, லோகேஷ் பேசுகையில், "நெதர்லாந்து அணியின் விளம்பரத்தை பார்த்ததும் சரி ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என தோன்றியது. இதற்கு, காரணம் இந்தியாவில் அதிக சைனாமேன் பவுலர்கள் இல்லாததால் எனக்கு வாய்ப்பு அதிகம் இருக்கும் என நினைத்தேன். மேலும், நெதர்லாந்து அணியும் இது போன்ற ஒரு பவுலரைத் தான் தேடினர்" என்றார்.

 

லோகேஷ் தனது முந்தைய பயணம் குறித்து பேசுகையில்" நான் கல்லூரி காலத்துக்குப் பிறகு, கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்த தொடங்கினேன். கடந்த நான்கு வருடங்களை கிரிக்கெட்டிற்காகவே செலவிட்டேன். இதனுடன், ஸ்விக்கி டெலிவரியில் சேர்ந்து தினசரி தேவைகளை பூர்த்தி செய்துகொண்டேன். இதனையே என் பிரதான பணம் ஈட்டும் வழியாகவும் பின் மாற்றிக்கொண்டேன். மேலும், டெலிவரி வேலை நேரமும் மிகவும் எளிதாக இருந்ததால் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை செய்து வந்தேன். வார இறுதியில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் போட்டிகளில் விளையாடி வந்தேன்" என நெகிழ்வாக தனது வாழ்க்கை நிகழ்வுகளை பகிர்ந்தார் லோகேஷ். லோகேஷ் குமார் தேர்வான செய்தியை நெதர்லாந்து கிரிக்கெட் அணி தனது அதிகாரப் பூர்வ ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதில் லோகேஷின் படத்துடன் அவரின் வாழ்க்கை குறித்தும் சிறிது விவரித்திருந்தனர்.

 

 


 

இதை படிக்காம போயிடாதீங்க !