மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான பிரையன் லாரா நேற்று திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மும்பையின் பரேலில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மும்பையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். இதனை அறிந்த அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்கள் வாயிலாக அவர் விரைவில் குணமடைய தங்களது பிரார்த்தனைகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று உடல்நலம் தேறியுள்ள அவர், ரசிகர்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பேசியுள்ள அவர், "என் உடல்நிலைக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து அனைவரும் கவலைப்பட்டீர்கள் என எனக்கு தெரியும். நான் காலையில் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியில் இருந்தேன் அப்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவரை கலந்தாய்வு செய்வது சரி என நினைத்து மருத்துவமனையில் சேர்ந்தேன். தொடர்ந்து மார்புவலி இருந்ததால், பல கட்ட சிகிச்சைகள் நடந்தன. நான் இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கிறேன். நலமாக இருக்கிறேன். தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்த்து வருகிறேன். தொடர்ந்து என்னுடைய செல்போன் ஒலித்துக்கொண்டே இருந்ததால், அதை ஆஃப் செய்துவிட்டேன். நாளை நான் ஹோட்டலுக்கு திரும்பிவிடுவேன் " எனத் தெரிவித்தார். அவரின் இந்த வீடியோ கமெண்டில் பல ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.