
ஐபிஎல் தொடரில் சீன நிறுவனமான விவோ -வை ஸ்பான்சராக தொடர்வது குறித்து பி.சி.சி.ஐ. விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
இந்திய, சீன எல்லையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சீனாவுக்கு எதிரான கருத்துகள் இந்தியாவில் அதிக அளவில் எழுந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாகச் சீனப் பொருட்களைப் பயன்படுத்துவதை இந்தியர்கள் தவிர்க்கவேண்டும் எனவும், சீனப் பொருட்களின் இறக்குமதிக்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும் சமூகவலைத்தளங்களில் கருத்துகள் எழுந்து வருகின்றன. இந்தச் சூழலில், ஐ.பி.எல். தொடரில் சீன நிறுவனமான விவோ -வை ஸ்பான்சராக தொடர்வது குறித்து பி.சி.சி.ஐ. விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
விவோ ஸ்பான்சர்ஷிப் குறித்துப் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பி.சி.சி.ஐ. பொருளாளர் அருண் துமால், "இதுபற்றி இன்னும் எதுவும் தீர்மானிக்கப்படவில்லை. சீன நிறுவனங்களுக்கு உதவுதலுக்கும், சீன நிறுவனத்திடமிருந்து பயன்பெறுவதற்கும் வித்தியாசம் உள்ளது. அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய நுகர்வோரிடமிருந்து சீன நிறுவனம் பணம் சம்பாதிக்கிறது, பின்னர் அதில் ஒரு பங்கை பி.சி.சி.ஐ.-க்கு ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப் செய்வதற்காகச் செலுத்துகிறது. அவர்களிடமிருந்து பெறும் பணத்திற்கு பி.சி.சி.ஐ. 42% வரி செலுத்துகிறது. எனவே இது நம் நாட்டுக்குச் சாதகமானதுதானே தவிரச் சீனாவுக்குச் சாதகமானதல்ல" எனத் தெரிவித்துள்ளார்.