உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதி ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்று வருகிறது. தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். தொடக்கம் மற்றும் மிடில் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட் விழ டேவிட் மில்லர், க்ளாசென் இணை அணியை ஓரளவு நல்ல ஸ்கோர் பெற உதவியது. சிறப்பாக ஆடியடேவிட் மில்லர் 101 ரன்களை விளாசினார். அவருக்கு கை கொடுத்த க்ளாசென் 47 ரன்களும், கோட்ஸி 19 ரன்களும் எடுத்தனர். இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 101 ரன்களை விளாசினார்.
ஆஸ்திரேலியா அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஹேசில்வுட், டிராவிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு 213 ரன்களை வெற்றி இலக்காக தென்னாப்பிரிக்க அணி நிர்ணயித்துள்ளது. இன்றைய அரையிறுதியில் வெல்லும் அணி நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.