சீமைக் கருவேல மரங்களால்தான் தமிழ்நாடு இப்படி வறட்சியில் சிக்கித் தவிக்கிறது. நிலத்தடி நீரையும், காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் இந்த சீமைக் கருவேல மரங்கள் உறிஞ்சிக் குடிக்கிறது. அதனால் நாளுக்கு நாள் தண்ணீர் குறைந்து நிலத்தடி நீர் மட்டம் கீழே சென்று கொண்டிருக்கிறது. அதனால் இந்த மரங்களை வேரோடு அழிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொன்னது. சொன்ன வேகத்தில் ஆங்காங்கே அழிப்பு நடவடிக்கைகளும் நடந்தது.
புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உயர்நீதிமன்ற நீதிபதிகளே நேரடியாக பார்வையிட்டு மாவட்ட நிர்வாகத்தை வேகப்படுத்தினார்கள். அதன் பிறகு அதற்கும் ஒரு தடை விழுந்தது. அதன் பிறகு சீமைக் கருவேல மரங்கள் அழிப்பு குறைந்து வருகிறது. அதனால் மீண்டும் அதிகமாக வளரத் தொடங்கிவிட்டது. இந்நிலையில்தான் தற்போது தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டுகளைவிட கூடுதலாகவே பெய்து இளைஞர்கள் முயற்சியில் சீரமைக்கப்பட்ட குளம், ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. ஆனால் சீமைக் கருவேல மரங்கள் அந்த தண்ணீரையும் குடித்துவிடுமோ என்ற அச்சம் இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கு கீழே சென்றுவிட்டதால் மீண்டும் நிலத்தடி நீரை மீட்க வேண்டும் என்று இளைஞர்கள் இணைந்து கிராமத்தில் உள்ள குளம், குட்டை, வரத்து வாய்க்கால்களை சொந்த செலவில் சீரமைத்து தற்போதைய மழையில் உடைப்புகளையும், அடைப்புகளையும் சரி செய்து தண்ணீரை நிரப்பி வருகின்றனர். மேலும் பனைவிதை விதைப்பு, மரக்கன்றுகள் நடுதல் போன்ற நற்பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
கொத்தமங்கலம் இளைஞர் மன்றத்தின் அடுத்த முயற்சியாக கிராமத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அழித்து சீமைக் கருவை இல்லாத கிராமமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு சீமைக் கருவேலங் கன்றை பிடிங்கிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு ரூ. 3 பரிசு வாங்கிச் செல்லலாம் என்று அறிவித்தனர். அறிவிப்பை தொடர்ந்து கிராமத்தில் உள்ள இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் சீமைக் கருவேலங் கன்றுகளை தேடிப் பிடித்து பிடிங்கிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு கன்றுக்கு ரூ. 3 வீதம் எண்ணிக்கைக்கு ஏற்ப பரிசு தொகையை பெற்றுச் செல்கின்றனர். வாங்கப்படும் சீமைக் கருவேலங்கன்றுகளை தீ வைத்து எரித்து அழித்து வருகின்றனர்.
இதுகுறித்து இளைஞர்கள் கூறும்போது... சீமைக் கருவேல மரங்களாலும் தைல மரங்களாலும் ஒட்டுமொத்த நீர் ஆதாரத்தையும் இழந்து வருகிறோம். ஒவ்வொரு இடமாகச் சென்று அழிப்பது சிரமமாக உள்ளது. அதனால் பரிசுத் திட்டத்தை அறிவித்து இளைஞர்களையும், மாணவர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறோம். அவர்களும் பரிசுக்காக இல்லாமல் அடுத்த தலைமுறை வாழ தண்ணீர் வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு சீமைக் கருவேலங் கன்றுகளை வேரோடு பிடிங்கி வந்து கொடுக்கிறார்கள். இப்படித்தான் சீமைக் கருவேல மரங்களை அழிக்க முடியும். விரைவில் எங்கள் கிராமம் சீமைக் கருவேல மரங்கள் இல்லாத கிராமமாக மாறும் என்பதில் பெருமையாக உள்ளது. மேலும் அதேபோல தைல மரங்களையும் அழிக்க தனியார் தோட்டக்காரர்களையும் வலியுறுத்தி வருகிறோம். சிலர் தங்கள் தோட்டங்களில் உள்ள தைல மரங்களை அழித்துள்ளனர். மற்ற விவசாயிகளும் அழித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் அரசாங்கமே தற்போது தைல மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு மானிய விலையில் கொடுத்து வருவதாக கூறுகிறார்கள். நாங்கள் மண்ணையும் மக்களையும் காக்க நினைக்கிறோம்.. ஆனால்..? என்றனர்.
முன்மாதிரி கிராமமாக கொத்தமங்கலம் மாறும் என்பதில் சந்தேகமில்லை. இளைஞர் மன்றத்தினருக்கு பாராட்டுகள்.