ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ், மும்பையில் மாரடைப்பால் காலமானார்.
டீன் ஜோன்ஸ் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவர். 1984 முதல் 1994-க்கு இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக 164 ஒருநாள் போட்டி, 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, அதன்பின் வர்ணனையாளராகச் செயல்பட்டு வந்தார். நடப்பு ஐ.பி.எல் தொடரின் வல்லுநர் குழுவில் ஒருவராக இருந்துவந்த டீன் ஜோன்ஸ், மும்பையில் ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக மரணமடைந்துள்ளார்.
இது குறித்து ஸ்டார் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், "டீன் ஜோன்ஸ் மரணம் வருத்தமளிக்கிறது. அவர் திடீர் மாரடைப்பால் காலமானார். அவர்களது குடும்பத்திற்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களது கடின காலங்களில் அவர்களுக்கு உதவத் தயாராக இருக்கிறோம். ஆஸ்திரேலிய உயர்மட்ட அதிகாரிகளுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்துப் பேசிவருகிறோம்" எனக் கூறப்பட்டுள்ளது.
1987-ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் டீன் ஜோன்ஸ் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.