இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நேற்று(30ம் தேதி) பாகிஸ்தான் மற்றும் நேபாள அணி விளையாடியது. போட்டியில் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. பாகிஸ்தானின் தொடக்க ஆட்ட வீரர் ஃபக்கர் சாமான் 14 ரன்களில் ஆட்டம் இழக்க, அடுத்து களமிறங்கிய இமாம் உல் ஹக் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார். அடுத்து பேட் செய்ய வந்து சிறப்பாக ஆடிய ரிஸ்வான் 44 ரன்களோடு வெளியேறினார்.
இவர்களுக்கு பின்னர் வலுவாக ஒன்றிணைந்த பாபர் அசாம், இப்திகார் அஹ்மத் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் இரு சதங்கள் அடித்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 214 ரன்கள் குவித்தனர். பாபர் அசாம் 131 பந்துகளில் 14 பௌண்டரி, 6 சிக்சர்களை அடித்து 151 ரன்களை குவித்தார். இப்திகார் அஹ்மத் 71 பந்துகளை எதிர்கொண்டு 109 ரன்களை எடுத்தார். இருவரின் அதிரடி ஆட்டத்தினால் பாகிஸ்தான் அணி முதல் பாதியில் 6 விக்கெட் இழந்து 50 ஓவருக்கு 342 ரன்கள் எடுத்திருந்தது.
நேபாள் வீரர் சோமபல் காமி இரண்டு விக்கெட்டுகளை எடுக்க கரன், சந்தீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர்.
முதல் முறை ஆசிய கோப்பையில் விளையாடிய நேபாள் அணியினருக்கு 342 ரன் இமாலய இலக்காகவே இருந்திருக்கும். இரண்டாம் பாதியில் களமிறங்கிய நேபாளின் தொடக்க வீரர் ஆசிப் ஷேக் சொற்ப ரன்களில் வெளியேற, குஷால் 8 ரன்கள் என ஏமாற்றமளிக்க. அணியின் கேப்டன் ரோகித், டக் அவுட் ஆகி மேலும் அதிர்ச்சியை அளித்தார். ஆரம்பத்திலே திணறிய நேபாள் அணி 14 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து, ஆசிப் ஷேக் - சோமபல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின்னர் அவர்களின் முயற்சியும் முறிந்து, ஷேக் 26 ரன்களும், சோமபல் 28 ரன்களுடன் ஆட்டம் இழக்க, குல்சானும் 13 ரன்களே எடுத்து வெளியேறினார்.
90 ரன்களை நேபாள் எட்டியபோது 5 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. அடுத்து விளையாடிய வீரர்கள் மொத்தமாக 14 ரன்களே சேர்த்து நேபாள் அணி ஆல்-அவுட் ஆனது.
பாகிஸ்தான் அணியின் சதாப் கான் 4 விக்கெட்டுகளை எடுத்தார். தொடர்ந்து, சாஹின் அப்ரிடியும் ரௌஃப்வும் தலா 2 விக்கெட்டுகள், நவாஸ் மற்றும் நசீமும் தலா 1 விக்கெட் எடுத்தனர். பந்து வீசிய அனைவரும் விக்கெட் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
23.4 ஓவர்கள் வரை தாக்குப் பிடித்த நேபாள அணியால் 104 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று. பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஆட்ட நாயகன் விருதை 151 ரன்கள் எடுத்த பாபர் அசாம் பெற்றார்.
முதல் போட்டியிலே பெரும் வெற்றியைப் பெற்ற முனைப்பில் இருக்கும் பாகிஸ்தான் அணி செப்டெம்பர் 2 இந்தியாவை பல்லேகலே ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. இரு அணிகளும் வலுவாக இருப்பதால் கடுமையான போட்டி நிலவ வாய்ப்புள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் இலங்கை பல்லேகலேவில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. சென்ற வருடம் நடந்த இருபது ஓவர் ஆசிய கோப்பையில் இலங்கை அணி வென்றது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி இந்த ஆண்டு நடந்த சில தொடர்களில் வெற்றியை எட்டாத நிலையில் இந்த ஆட்டத்தை எதிர்கொள்கிறது. அதேபோல், வங்கதேசமும் உள்நாட்டில் நடைபெற்ற இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் உடனான ஒருநாள் போட்டியில் தோல்வி கண்டுள்ளது. எனவே இரு அணிகளும் தங்களது கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். பி பிரிவில் நடைபெறும் முதல் ஆட்டம் இது. மேலும், இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.