அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டிகளுக்கு வேகபந்து வீச்சில் புவனேஷ், பும்ராஹ் இணை தயாராக உள்ளது. உலகின் சிறந்த வேகபந்து வீச்சாளர்களாக திகழ்ந்து வருகின்றனர். சுழற்பந்து வீச்சு இணையான குல்தீப் யாதவ், சஹாலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். டாப் ஆர்டர் பேட்டிங்கை பொறுத்தவரை ஷர்மா, தவான், கோலி ஆகியார் சாதனை மேல் சாதனை படைத்து உலகின் சிறந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக இருந்து வருகின்றனர். ஆனால் இந்த மிடில் ஆர்டர் பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை.
தற்போது விளையாடிவரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் தோனி மட்டுமே தனது உலக கோப்பை இடத்தை உறுதி செய்துள்ளார். அவர் 5-ஆம் இடத்தில் களமிறங்க வாய்ப்புகள் அதிகம். 4 மற்றும் 6-ஆம் இடத்தில் களமிறங்க போகும் வீரர்கள் யார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. கடந்த சில தொடரில் ராயுடு சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். ரோஹித் மற்றும் கோலி இருவரும் உலக கோப்பையில் 4-வது இடத்தில் ராயுடு விளையாடுவார் என்பதை உறுதி செய்துள்ளனர்.
ராயுடுவின் தகுதியையும், அனுபவத்தையும், புள்ளி விவரங்களையும் சற்று ஆராய்ந்து பார்த்தால் இது அவருக்கு மிகவும் தாமதமாக கிடைத்த வாய்ப்பாகவே கருதப்படுகிறது. 33 வயதான ராயுடு ஆந்திராவை சேர்ந்தவர். அண்டர் 15, 16, 17, 19 ஆகிய லெவல்களில் இந்திய அணிக்கு ஆடியுள்ளார். 2004-ல் பங்களாதேஷில் நடைபெற்ற அண்டர் 19 உலக கோப்பையில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார். 2007-ல் தொடங்கப்பட்ட ஐ.சி.ல். போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். இதன் மூலம் ஐ.பி.ல். 2010-ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றார்.
2010 முதல் ராயுடு மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக சிறப்பாக செயல்பட்டு வந்தார். துவக்க ஆட்டக்காரர் முதல் 7-வது நிலை வீரர் என அனைத்து இடங்களிலும் அணியின் தேவைக்கு ஏற்ப களமிறங்கினார். அணி இக்கட்டான சூழ்நிலையில் உள்ளபோது அணியை மீட்டு வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார். இதனால் அவருக்கு தேசிய அணியில் 2013-ல் இடம் கிடைத்தது. வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அசத்தினார். 2014-ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் 118 பந்துகளில் 121* ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடியதால் 2015 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார் ராயுடு. ஆனால் 11 பேர் கொண்ட அணியில் விளையாட வாய்ப்பு கிட்டவில்லை.
2016-ல் மூன்று போட்டிகளில் விளையாடி 103 ரன்கள் எடுத்திருந்தார். 2017-ல் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2018-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் ஐ.பி.ல்.க்கு திரும்பிய போது அந்த அணியால் ஏலத்தில் எடுக்கபட்டார். ஐ.பி.ல். 2018-ல் 16 போட்டிகளில் விளையாடிய அவர் 602 ரன்கள், 43 சராசரி, 1 சதம், 150 ஸ்ட்ரைக் ரேட் என அசத்தினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை பெற முக்கிய பங்காற்றினார்.
2018-ல் மீண்டும் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டு இது வரை 10 இன்னிங்ஸ்களில் 392 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 56, ஸ்ட்ரைக் ரேட் 91 என இந்த வருடம் மிக சிறப்பாக ஆடினார். ஒரு நாள் போட்டிகளில் ராயுடுவின் சராசரி 52 ஆக உள்ளது. விராத் கோலிக்கு பிறகு இந்திய அணியில் அதிக சராசரி கொண்ட வீரர் ராயுடு என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மிகவும் குறைத்து மதிப்பிட பட்டுருக்கிறார் என்பதே உண்மை. வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் நன்றாக விளையாடி வரும் ராயுடு அதிக அனுபவமும், சிறப்பான பீல்டிங் திறமையையும் கொண்டவர். அவர் அடுத்த வருடம் நடக்க உள்ள உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்கு முக்கிய பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.