இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு கரோனா அறிகுறிகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கரோனா வைரஸால் இதுவரை 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.46 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 5.5 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாக பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டு தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் கலந்துகொண்ட இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், தனக்கு கரோனா அறிகுறிகள் தீவிரமடைந்துள்ளதாக தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.எல் தொடரில் பங்கேற்ற அவர், அரையிறுதி போட்டிக்கு முன்னரே, தனக்கு கரோனா அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவித்தார். இதன் காரணமாக தொடரிலிருந்து விலகிய அவர் மீண்டும் இங்கிலாந்து சென்றார். மேலும், அணி வீரர்களையும் தகுந்த மருத்துவ சோதனைகள் எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியிருந்தார்.
இந்த சூழலில், தனக்கு கரோனா அறிகுறிகள் தீவிரமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், அதிகப்படியான வறட்டு இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவர்களின் ஆலோசனையின்படி, வீட்டிலேயே தனிமையில் உள்ளதாகவும், இன்னும் ஒருசில தினங்களில் கரோனா சோதனையை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவரின் இந்த தகவல், பி.எஸ்.எல். தொடரில் அவருடன் விளையாடிய வீரர்களுக்கு கரோனா குறித்த பீதியை ஏற்படுத்தியுள்ளது.