Skip to main content

உலகக்கோப்பை கனவை நனவாக்கிய தோனியின் சிக்ஸர்! - இன்றோடு ஏழு ஆண்டுகள் நிறைவு..

Published on 02/04/2018 | Edited on 03/04/2018

உலக கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்து மாறுபட்டவர்கள் இந்திய ரசிகர்கள். அவர்களுக்கு கிரிக்கெட்தான் எல்லாமே. ஆனால், இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும் காட்சியைக் காணவேண்டும் என்பதுமட்டும் அவர்களுக்குக் கனவாக இருந்துவந்தது. உலகத்தை நவீனகால கிரிக்கெட் வசீகரித்துக் கொண்டிருந்த 2011ஆம் ஆண்டில், இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம்  ஆகிய மூன்று நாடுகள் சேர்ந்து உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தின. தெண்டுல்கர், சேவாக், ஜாகீர் கான் என சர்வதேச கிரிக்கெட் களத்தை மிரட்டி வைத்திருந்த ஜாம்பவான்களுக்கு கடைசி உலகக்கோப்பை என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்பட்டது.

 

WC

 

தோனி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, ஹாட் ட்ரிக் உலக சம்பியனான ஆஸ்திரேலியாவை காலிறுதியிலும், பிரதான ரைவல்ரியான பாகிஸ்தானை அரையிறுதிலும் எதிர்கொண்டு, அபாரமாக வெற்றிபெற்றது. இந்த வெற்றிகளின் மூலம், 8 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற இந்திய அணி, இந்திய ரசிகர்களின் கனவை பாதி நனவாக்கியது.

 

இலங்கையுடனான இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இதே நாளில் (ஏப்ரல் 2) நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இரண்டு முறை டாஸ் போடப்பட்டு, இரண்டாவது டாஸில் இலங்கை வெற்றிபெற்று பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. மகேலா ஜெயவர்தனே அதிகபட்சமாக 103 ரன்கள் எடுத்திருந்தார்.

 

WC

 

பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சேவாக் முதல் பந்திலேயே அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். நம்பிக்கை நட்சத்திரமான சச்சினும் 18 ரன்களில் வெளியேற கம்பீர் - கோலி இணை நிதானமாக ஆடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. கோலி பெவிலியன் திரும்பிய நிலையில், யுவ்ராஜ் சிங்கிற்கு முன்பாக களமிறங்கிய தோனி ஆட்டத்தின் வேகத்தைக் கூட்டி 10 பந்துகள் மீதமிருந்த நிலையில், சிக்ஸருடன் இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். ‘நான் சாகும்போது கூட அந்த சிக்ஸரைப் பார்க்க வேண்டும் என்பதுதான் என் கடைசி ஆசை’ என சுனில் கவாஸ்கரே பெருமிதம் கொள்ளுமளவிற்கு இருந்தது அந்த சிக்ஸர். இப்போதும் மயிர்க்கூச்சம் தரும் தோனியின் அந்த சிக்ஸர் வெற்றிக் களிப்பையும் தாண்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களில் முத்திரையாக பதிந்துவிட்டது.

 

Dhoni

 

28 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அணி உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக சொந்த மண்ணில் கோப்பையை வென்ற சாதனையைப் படைத்தது இந்திய அணி. இந்தப் போட்டியில் 91 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். அது நடந்து முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அதே நாளான இன்று தோனிக்கு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவிக்கிறது இந்திய அரசு.

 

வெற்றியைத் தந்த தோனியின் சிக்ஸர்..