Skip to main content

உலககோப்பை அணியில் இடம்பெறாத 11 வீரர்கள்...

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

இங்கிலாந்திலும், வேல்ஸ் நகரத்திலும் இந்த ஆண்டு மே 30 முதல் நடைபெற உள்ள உலககோப்பையில் பங்குபெறும் 10 நாடுகளை சேர்ந்த 150 கிரிக்கெட் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கப்பட்டுள்ள அணியில் மாற்றங்களை செய்ய மே 23-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. இந்த நிலையில் அறிவிக்கப்பட்ட பெயர்களில் சில ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன. 

 

rayudu

 

இந்த நிலையில் தகுதியும், திறமையும் இருந்தும், சில காரணங்களாலும், அதிர்ஷ்டம் இல்லாமலும் உலககோப்பை அணிகளில் இடம்பெறாத 11 வீரர்களை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.) . 
 

நீரோஷன் டிக்வெல்லா (இலங்கை), அம்பதி ராயுடு (இந்தியா), ரிஷாப் பண்ட் (இந்தியா), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் (ஆஸ்திரேலியா), தினேஷ் சன்டிமால் (இலங்கை), கியரோன் பொல்லார்டு (வெஸ்ட் இண்டீஸ்), முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்), ஆசிப் அலி (பாகிஸ்தான்), ஜோஃப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து), அகிலா தனன்ஜயா (இலங்கை), முகமது அமீர் (பாகிஸ்தான்).
 

நீரோஷன் டிக்வெல்லா (இலங்கை - விக்கெட் கீப்பர்) - கடந்த 1 வருடத்தில் 15 இன்னிங்ஸில் 497 ரன்கள் எடுத்துள்ளார். 
 

rayudu

 

அம்பதி ராயுடு - இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 2018 செப்டம்பரில் ஒருநாள் போட்டிகளில் மாஸ் கம்பேக் கொடுத்தார். கம்பேக்கிற்கு பிறகு 1 சதம், 4 அரைசதங்கள் அடித்துள்ளார். இவரின் பேட்டிங் சராசரி 56. 
 

ரிஷாப் பண்ட் - இதுவரை ஐந்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார் என்றபோதிலும் இவரது ஆக்கிரோஷமான பேட்டிங் அணுகுமுறையும், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியதும் அவருக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அனுபவம் மற்றும் பினிஷர் ரோல் காரணமாக கார்த்திக் அந்த இடத்தை பிடித்தார்.

 

pant

 

பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் - ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா அணிக்கு திரும்பியவுடன் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் அணியியிலிருந்து நீக்கப்பட்டார். 2019-ஆம் ஆண்டில் 13 போட்டிகளில் மூன்று அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் உட்பட 479 ரன்கள், 43.54 சராசரி வைத்துள்ளார். மேலும் விக்கெட் கீப்பராகவும் செயல்படுபவர்.  
 

தினேஷ் சன்டிமால் - 2010-ஆம் ஆண்டில் அறிமுகமான இவர் சமீப காலங்களில் இலங்கையின் வெற்றிகரமான பேட்ஸ்மேனாக விளங்கி வந்தார். 2018-ஆம் ஆண்டில் சராசரி 42.57. அனுபவம் வாய்ந்த சன்டிமால் இலங்கை அணியில் இடம்பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.   
 

பொல்லார்டு - இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் 228 ரன்கள் எடுத்துள்ளார் (ஸ்ட்ரைக் ரேட் 158). சிறந்த ஃபினிஷராகவும், அனுபவமும் உள்ள பொல்லார்டுக்கு உலககோப்பை அணியில் விளையாட வாய்ப்பளிக்கவில்லை.
 

முகமது ரிஸ்வான் - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்த போது இவர் இரண்டு சதங்கள் அடித்தார். தற்போது நல்ல ஃபார்மில் உள்ள ரிஸ்வானுக்கு உலககோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.   
 

ஆசிப் அலி - பாகிஸ்தான் அணியில் ஹிட்டர் ரோலில் மிகவும் அற்புதமாக ஆடியுள்ளார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 131. 
 

ஜோஃப்ரா ஆர்ச்சர் - தற்போது ஐபிஎல் போட்டிகளில் கலக்கலாக பவுலிங் செய்து வருகிறார். டெத் ஓவரில் சிறப்பாக யார்க்கர் வீசும் ஆர்ச்சர் டி20 போட்டிகளில் சிறந்த பவுலராக வலம்வருகிறார். இருந்தபோதிலும் உலககோப்பை அணியில் இடம்பெறவில்லை. ஆனால் இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான் அணிகள் விளையாடும் தொடரில் இடம்பெற்றுள்ளார். 
 

அகிலா தனன்ஜயா – இவர் உலககோப்பை அணியில் இடம்பெறாமல் போனது மிகவும் ஆச்சரியமான ஒன்று. கடந்த ஆண்டு 16 போட்டிகளில் பவுலிங் சராசரி 23.00, 28 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 
 

முகமது அமீர் - தான் எதிர்கொள்ள கடினமான பந்து வீச்சாளராக இருப்பவர் என்று நம்பர் 1 பேட்ஸ்மேன் விராட் கோலியால் கூறப்பட்ட இவர், உலககோப்பை அணியில் இடம்பெறவில்லை. இருப்பினும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 17 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளார். 2017-ல் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தார். பாகிஸ்தான் அணி 2017-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வெல்ல ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.
 

சில ஆச்சரியங்கள் 
 

நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடாத ஸ்பெஷலிஸ்ட் டெஸ்ட் ஓபன்னிங் பேட்ஸ்மேன் டிமுத் கருணரத்னா உலக கோப்பைக்கான இலங்கை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 17 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். பேட்டிங் சராசரி 16. 
 

உலக கோப்பைக்கு சில வாரங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சில அதிரடி முடிவுகளை மேற்கொண்டுள்ளது. டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20-களில் கேப்டனாக இருந்த அஸ்கர் ஆப்கானை பதவியிலிருந்து  நீக்கம் செய்துள்ளது. இதுவரை சர்வதேச போட்டிகளில் ஒருமுறை கூட கேப்டனாக அனுபவமில்லாத குல்பதின் நைப்பை கேப்டனாக அடுத்த தொடருக்கு அறிவித்துள்ளது.