‘ஓம் சரவண பவ’ யூடியூப் சேனலுக்கு சித்த மருத்துவர் ஷர்மிகா நம்முடைய உணவு முறைகள் பற்றியும், எதையெல்லாம் முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும், எதையெல்லாம் உண்ண வேண்டும் என்பது பற்றியும் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், உணவில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய காய்கறிகளும் அதன் பயன்களும் என்ற கேள்விக்கு அவர் அளித்த விளக்கத்தினை பின்வருமாறு காணலாம்.
நாம் பார்க்காத, வாங்காத, அடிக்கடி பயன்படுத்தாத காய்கறிகள் என்று நிறைய இருக்கும். அதையெல்லாம் தேடி வாங்கி சாப்பிட வேண்டும். ஒரே காய்கறிகளைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தினால் குறிப்பிட்ட சத்துக்கள்தான் அதிகம் சேரும்.
கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற காய்கறிகளில் எல்லாம் வைட்டமின், புரோட்டீன், நார்ச்சத்து போன்ற சத்துகள் குறைந்த அளவும் நீர்ச்சத்துதான் அதிக அளவு இருக்கும். நாம் அடிக்கடி வாங்கும் காய்கறிகளான அவரைக்காய், பாகற்காய், கொத்தவரங்காய், புடலங்காய், பீர்க்கங்காய் இந்த மாதிரியான காய்கறிகள் நீர்ச்சத்தை விட வைட்டமின், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்திருக்கும்.
இது நாட்டுக் காய்கறி, இது வெளிமாநில காய்கறிகள் என்று வகைகளைப் பார்த்துத் தான் நாம் காய்களை வாங்குகிறோம். இதுபோன்ற நாட்டுக் காய்கறிகளைச் சாப்பிடுங்கள். அதே சமயத்தில் வெளிமாநிலத்திலிருந்து வருகிற காய்கறிகளையும் சாப்பிடுங்கள் அப்போதுதான் எல்லாச் சத்துக்களும் கிடைக்கும்.
எல்லாக் காய்கறிகளையும் பொரியல் செய்து சாப்பிடுங்கள்; அதுவும் செக்கில் ஆட்டிய சுத்தமான எண்ணெய்யில் செய்து சாப்பிடுவதுதான் சிறந்தது. அதையும் ரீபைண்ட் ஆயிலில் செய்து சாப்பிட்டால் ஐம்பது சதவீத சத்துதான் கிடைக்கும்.
அந்தந்த சீசனுக்குத் தகுந்தாற்போல கிடைக்கும் காய்கறிகளை வாங்கி சமைத்துச் சாப்பிடுவது நல்லது; அது சத்துக்களை சரிவிகித அளவில் நம் உடலில் தரக்கூடியது; அதனால் நன்மை உண்டாகும்.