உடல் எடையைக் குறைப்பதற்காக பத்து நாட்கள் பட்டினி கிடந்துவிட்டு ஒரு நாளைக்கு ஒரே ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால் உடல் எடை மூன்று கிலோ வரை ஏறிவிடுமெனச் சொல்கிறார்களே இது சாத்தியமா? என்ற கேள்வியை பிரபல மருத்துவர் அருணாச்சலம் அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...
நீங்க எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தும், உங்களுடைய உடல் அதை எவ்வளவு ஏற்றுக்கொள்கிறது என்பதைப் பொறுத்தும், உங்களுடைய உடல் எடை ஏற வாய்ப்பு இருக்கிறது. ஹை கிளைசெமிக் இன்டெக்ஸ் உணவுகள் என்று ஒரு பட்டியல் இருக்கிறது. அதை எல்லாம் சாப்பிட்டால் உடல் எடை ஏற வாய்ப்பு அதிகம். அந்த பட்டியலில் இனிப்பு நிறைந்த உணவு வகைகள் வரும். (குலாப் ஜாமுன் இனிப்பான ஜீராவில் ஊற வைத்த உணவு என்பது குறிப்பிடத்தக்கது)
ஒவ்வொருவரின் உடல்வாகு வித்தியாசப்படும். ஒருத்தர் 10 குலாப் ஜாமுன் சாப்பிட்டும் ஒல்லியாக இருப்பார். ஒருத்தர் 4 குலாப் ஜாமுன் சாப்பிட்டும் உடல் எடை ஏற வாய்ப்பிருக்கிறது. எல்லாருக்கும் மொத்தமாக இது பொருந்தாது. சாப்பிடுகிற உணவையெல்லாம் உடல் பருமனாக்குகிறவர்கள் யார் என்பதை, நீங்கள் ஒருவர் சாப்பிடும்போதே தெரிந்து கொள்ளலாம். அவரின் ஜீரணிக்கும் தன்மையைப் பொறுத்தும் மாறுபடும்.
மருத்துவரின் அறிவியல் பூர்வமான விளக்கத்திலிருந்து, ஒரு நாளைக்கு ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால், உடல் எடை மூன்று கிலோ வரை அதிகரிக்கும் என்பது அனைவருக்கும் பொருந்தாது, ஒவ்வொருவரின் உடல்வாகுக்கு தகுந்தாற்போல மாறுபடும் என்பது தெரியவருகிறது.