நோய் என்பது உடல் சார்ந்தது மட்டும் அல்ல; அது மனம் சார்ந்ததும் கூட. உடல்நலம் குறித்து அதிகம் கவலைப்படும் நாம் அதிகம் கண்டுகொள்ளாமல் இருக்கும் மனச்சிதைவு நோய் குறித்து டாக்டர் பூர்ண சந்திரிகா விளக்குகிறார்.
அனைத்து மனநல மருத்துவர்களும் சந்திக்கும் நோயாளிகளில் பலருக்கு இருப்பது மனச்சிதைவு நோய். இந்த நோய் குறித்து சில திரைப்படங்களும் வந்துள்ளன. என்னிடம் 26 வயது இளைஞர் ஒருவரை அழைத்து வந்தனர். அவர் கல்லூரியில் நன்கு படிக்கக் கூடியவர். அனைவரிடமும் தன்மையாகப் பழகக் கூடியவர். சில பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட அவர் ஒரு கட்டத்தில் தனியாகப் பேசவும் சிரிக்கவும் ஆரம்பித்தார். காரணம் இல்லாமல் கோபப்பட ஆரம்பித்தார். நண்பர்களுடனும் அவர் பேசுவதில்லை. தூக்கம் இல்லாமல் தவித்தார். மற்றவர்கள் அனைவரும் தன்னைப் பற்றிப் பேசுவது போல் உணர்ந்தார். அவருக்கு ஏற்பட்டிருப்பது மனச்சிதைவு நோய் என்பதை அறிந்தேன்.
இது போன்ற அறிகுறிகள் ஒருவருக்குத் தொடர்ந்து ஒரு மாதம் நீடித்தால் மனச்சிதைவு நோய் ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம். இப்போது இந்த நோய்க்கான சிகிச்சை முறைகள் நிறைய இருக்கின்றன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மனநலப் பிரிவுகள் இருக்கின்றன. மனச்சிதைவு நோய் ஏற்பட்டவர்களுக்கு மாத்திரைகளோடு சில தெரபிகளும் தேவைப்படும். மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தாம் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பது தெரியாது. அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்களுடன் இருப்பவர்கள் தான் தொடர்ந்து வழங்க வேண்டும்.
தொடர்ந்து ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்ட பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் தங்களுடைய இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். தங்கள் மீது அக்கறை எடுத்துக்கொள்ளும் ஒருவர் அருகில் இருந்தால் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய முடியும்.