அண்ணாமலை பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் இரண்டாவது பழமையான, பல்துறை புலங்களைக் கொண்ட, மிகப்பெரிய பல்கலைக்கழகம். இப்பல்கலைக் கழகம் தேசிய தர மதிப்பீட்டு நிறுவனத்தினால் நான்காவது முறையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு 4-க்கு 3.38 மதிப்பெண்களுடன் A+ தரச்சான்று பெற்றுள்ளது. இதுதொடர்பாக இம்மாதம் 15 முதல் 17 வரை இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நாகேஸ்வரராவ் தலைமையிலான குழுவினர் பல்கலைகழகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னதாகக் கடந்த மார்ச் மாதத்தில் அசாம் பல்கலைக்கழகம், முன்னாள் துணைவேந்தர் கந்தர்ப்ப குமார் தேகா, தலைமையிலான குழு பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு தன்னுடைய அறிக்கையினை தேசிய தர மதிப்பீட்டுக் குழுவிற்கு சமர்ப்பித்திருந்தது. ஆனால், தரமதிப்பீடு முடிவு வெளியிடப்படாமல் மீண்டும் ஒரு குழு ஆய்வு செய்யும் என தேசிய தர மதிப்பீட்டு நிறுவனம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு இந்த தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன், “இத்தரச்சான்றானது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஓய்வில்லா கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். இதற்கு முன்னர் பெற்றிருந்த A+ (3.09) தர சான்றுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இவ்வெற்றிக்கு ஒத்துழைப்பு நல்கிய மாணவர்களுக்கும் முன்னாள் மாணவர்களுக்கும் நன்றி” என தெரிவித்தார்.