விவசாய விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை, விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்து என்பன உள்ளிட்ட வேளாண் கோரிக்கைகளை வலியுறுத்த பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டிராக்டர்களில் உணவு, மருந்து பொருட்களுடன் இந்தியத் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்ற போது மாநில எல்லையிலேயே முள்வேலிகள், தடுப்புக்கட்டைகள் அமைத்து தடுக்கப்பட்டனர்.
தடுப்புக்கட்டைகளை தகர்த்தெரிந்த விவசாயிகள் தடையை மீறி டெல்லி நோக்கி புறப்பட்ட போது சொந்த நாட்டு விவசாயிகள் மீதே கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் நிலைகுலையச் செய்தனர். அந்த தடைகளையும் தாண்டிச் செல்லும் போது ரப்பர் குண்டுகளால் சுடப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளால் ஏற்பட்ட நச்சுப் புகையால் மூச்சுத் திணறிய 65 வயது கியான் சிங் என்ற விவசாயியும், ரப்பர் குண்டு அடிபட்டு தலையில் காயமடைந்த 21 வயது இளம் விவசாயியும் போராட்டக்களத்திலேயே உயிர்நீத்தனர். இதற்கிடையில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
அதன் பிறகும் விவசாயிகளை முன்னேற விடாமல் மத்திய அரசின் போலீசார் தடுத்து வருகின்றனர். விவசாயிகள் உயிர்ப்பலியானதால் தற்காலிகமாக முன்னேறிச் செல்வதை நிறுத்தி அதே இடத்தில் தங்கியுள்ளனர். அடுத்தகட்டமாக விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துவிடாமல் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர் அரணாக உள்ளது.
இந்திய விவசாயிகளுக்காக டெல்லி எல்லையில் போராடும் பஞ்சாப், அரியானா விவசாயிகளின் கோரிக்கைகளை வென்றெடுக்கவும், விவசாய நாடு என்று வெளியில் சொன்னாலும் சொந்த நாட்டு விவசாயிகளையே சுட்டு விரட்டும் மத்திய அரசை கண்டித்தும் இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம் பற்றிக் கொண்டுள்ளது.
இந்த வகையில் புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து மாவட்ட எல்லை கிராமமான ஆவணம் கைகாட்டியில் டிராக்டர் பேரணியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில் நள்ளிரவில் அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்திற்கு வந்த டிராக்டர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். ஆனால் திட்டமிட்டபடியே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு வந்த டிராக்டர்களையும் ஓரமாக நிறுத்தி வைத்திருந்தனர். அதே நேரத்தில் பாஜகவினரும் அதே பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.