தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய தொகுதி விளாத்திகுளம். எட்டயபுரம் ,விளாத்திகுளம் என இரண்டு தாலுகாக்கள், கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம், கயத்தார் என ஐந்து ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய தொகுதி. வேம்பார் முதல் தருவைகுளம் வரை 30 கி.மீ. தொலைவுக்கு கடற்கரை, மீன்பிடி தொழில், உப்பள தொழில். இன்னொருபுறம் வானம் பார்த்த கரிசல் பூமி, மானாவாரி விவசாயம், நெசவு தொழில், கரிமூட்டம் தொழில் என பன்முகத்தன்மையுடன் தொகுதி விரிந்து கிடக்கிறது.
இதுவரை நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் 8 முறை அதிமுக வென்றுள்ளது. திமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவின் அசைக்க முடியாத எக்கு கோட்டைகளில் ஒன்று விளாத்திகுளம் தொகுதி. 2019 நாடாளுமன்ற தேர்தலுடன் விளாத்திகுளம் தொகுதிக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலும் வர இருப்பதால் இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வர உள்ளார்கள் தொகுதியும், தொகுதி மக்களும்.
சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளும் அதிமுகவை பொறுத்தவரை முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன், திமுகவைப் பொறுத்தவரை ஜெயக்குமார் ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர். அதிமுகவினர் ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொகுதி மக்களோடு தொடர்பிலும் இருக்க, திமுகவினர் இங்கு விருந்தினராக இருப்பதால் மக்களுக்கும் அவர்களுக்குமான் இடைவெளி அதிகமாக இருக்கின்றது. விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட குளத்தூர், வேம்பார், சூரன்குடி, வைப்பாறு உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலையோர கிராமப்பகுதிகள் அனைத்தும் திமுக வாக்கு வங்கி உள்ள பகுதிகள். நாகலாபுரம், புதூர், விளாத்திகுளம் நகரம் ஆகிய பகுதிகள் அதிமுக வாக்கு வங்கி உள்ள பகுதிகள். எட்டயபுரம் பேரூராட்சி பகுதிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமமுக வாக்கு வங்கி உள்ள பகுதியாக உள்ளது.
வெங்காயம், மிளாகய் வத்தல், மல்லி மற்றும் சிறுதானிய பயிர்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் நிலையங்களை அமைத்து கொள்முதல் செய்ய வேண்டும். கீழ வைப்பாறு, சிப்பிகுளம், வேம்பார் ஆகிய பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டு அழிவில் விளிம்பில் உள்ளது. அப்பகுதிகளில் கடல் தொழில் செய்வதற்கு ஏதுவான கட்டமைப்புகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்களை பணி அமர்த்த வேண்டும். கிராமங்களுக்கு மினி பஸ் சேவை வழங்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. 2016 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உமா மகேஸ்வரியால் தொகுதிக்கு எந்த நன்மையும் இல்லை. எந்த கெடுதலும் இல்லை. சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்கு வந்ததும், சென்றதும் அவரை பொறுத்த வரை ஒரு சுக்கிர திசை. மக்களுக்கு சிரம திசை.
வரும் தேர்தலால் மக்களின் சிரம திசை மாறவேண்டுமென்பது தொகுதி மக்களின் கனவு, நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.