Skip to main content

"சென்னையில் இப்படி ஒரு கோயிலா? சூரிய நமஸ்காரம் செய்ய இக்கோயிலுக்கு வந்த ஆஞ்சநேயர்" - விவரிக்கிறார் சுஜாதா பாபு

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

"Is there such a temple in Chennai? Anjaneya came to this temple to perform Surya Namaskar...." - Sujata Babu narrates!

 

'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு பிரபல தனியார் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான சுஜாதா நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "நான் இப்போது நிறைய கோயில்களுக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில கோயில்களுக்கு செல்வது வழக்கம். செங்கல்பட்டு மாவட்டம், புதுப்பாக்கத்தில் ஸ்ரீ ராம வீர ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு நான் சென்றிருக்கிறேன். அது ஒரு மலைக் கோயில். அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்வதற்கு பாதை உள்ளது. அதேபோல், பக்தர்கள் நடந்து செல்வதற்கு ஏதுவாக படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 108 படிக்கட்டுகள் உள்ளன. 

 

அதிகாலை 06.00 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். அதேபோல், வாரத்தில் சனிக்கிழமைகளில் ரொம்ப விஷேசமான நாள் என்பதால், அதிகாலை 05.00 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். நான் படிக்கட்டுகள் மூலம் நடந்து வரும்போது, மயில் மற்றும் குயில் கூவுகிற சத்தம் கேட்கும். அதேபோல், மலையில் நிறைய மலர் செடிகள் வைத்திருக்கிறார்கள். அதிகாலை கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டால், அந்த நாளே நன்றாக இருக்கும். எனக்கு ரொம்ப பிடித்த கோயில் இது. 

 

இந்த கோயில் 9- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதற்கான ஆதாரம் கோயிலில் உள்ளது. 9- ஆம் நூற்றாண்டுக்கு பிறகு, 16- ஆம் நூற்றாண்டில் ஒருமுறை புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது. 18- ஆம் நூற்றாண்டிலும் இக்கோயில் சிதிலமடைந்த பிறகு, மீண்டும் புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது. ஈ.சி.ஆர். சாலையில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோயிலில் என்னென்ன பூஜைகள் செய்வார்களோ அதே மாதிரியான பூஜைகளும், பிரார்த்தனைகளும் இந்த புதுப்பாக்கம் ஆஞ்சநேயர் கோயிலில் பண்ணுகிறார்கள். ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயில், திருவிடந்தை கோயில், புதுப்பாக்கம் ஆஞ்சநேயர் கோயில் ஆகிய மூன்று கோயில்களும் திருமங்கை ஆழ்வார் அவர்களால் கட்டப்பட்டது என்று கூறுவதற்கான ஆதாரமும் இந்தக் கோயிலில் உள்ளது. 

 

இந்தக் கோயிலுக்கு உண்டான ஐதீகம், கதை என்ன என்பது குறித்து பார்ப்போம். இங்கு இருந்து ஆஞ்சநேயர் மூன்று முறை இலங்கைக்கு சென்றிருக்கிறார். வானரப்படையெல்லாம் இணைந்து சேது சமுத்திரம் வழியாக, இலங்கைக்கு படையெடுத்து செல்கிறார்கள். அப்பொழுதும், ஆஞ்சநேயர் இலங்கைக்கு சென்றார். போரின்போது லட்சுமணன் மயக்கமடைந்து கீழே விழுந்து விடுகிறார். அப்போது சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வந்தால் லட்சுமணனை எழுப்பலாம் எனக் கூற... சஞ்சீவி மலையை எடுத்து வருவதற்காக ஆஞ்சநேயர் இந்தியாவிற்கு வருகிறார். ஆஞ்சநேயரின் குருவான சூரியனுக்கு நாள்தோறும் மாலையில் மரியாதை செய்ய வேண்டும் என்பதால் அந்த நேரத்தில் இந்த புதுப்பாக்கம் ஸ்ரீ ராம வீர ஆஞ்சநேயர் கோயிலில் தனது பாதத்தை வைத்து சூரிய நமஸ்காரம் செய்தார் என்று ஐதீகம் உள்ளது. 

 

இந்த இடத்தில் ஒரு கோயில் கட்ட வேண்டும்; என்ன சிலை வைக்கலாம் என்று எண்ணிய திருமங்கை ஆழ்வார் அதே இடத்தைத் தோண்டிப் பார்க்கிறார். அப்பொழுது ஒரு ஆஞ்சநேயர் சிலை கிடைக்கிறது. இதனால் இக்கோயில் மிகவும் விஷேசமானது" எனத் தெரிவித்துள்ளார்.