சிவ. சேதுபாண்டியன்.
எட்டாம் அதிபதியைக்கொண்டு ஆயுள் மட்டும் கணிக்கப்படுவதில்லை. ஆயுள் முடியக் காரணமானவரும் அவரே. ஆயுள் முடியும் காலநேரம், அரசாங்கத்தால் ஏற்படும் உயிர்ச்சேதம் (தூக்கு, என்கவுன்டர்), இராணுவத்தில் வீரமரணம், கொலை செய்யப்படுதல், கொடூர விபத்து, உடலுறுப்பு மாற்று சிகிச்சை உள்ளிட்டவை குறித்து எட்டாமிடம் கொண்டு அறியலாம். மனிதனுக்கு மரணமும், பிறப்புக்குரிய அனைத்து வேலைப்பாடுகளும் இந்த எட்டாம் பாவகத்தில்தான் காணப்படுகிறது. எட்டாமிடத்திற்கான அதிபதி (லக்னத்திலிருந்து கணக்கிடவும்) எட்டில் இருப்பது நீண்ட ஆயுளைத் தரக்கூடும். எட்டாமிடத்து அதிபதி ஆறில் மறைவதைவிட 12-ல் மறைவது நல்ல ஆரோக்கியத்தையும் தீர்க்காயுளையும் வழங்கும். எட்டாம் அதிபதி 2-ஆமிடத்தில் இருந்தால், அவர் ஏழாம் பார்வையாக எட்டாமிடத்தைப் பார்ப்பார். அதன்மூலம் ஜாதகருக்கு தீர்க்காயுள் கிடைக்கும். எட்டாமிடத்து அதிபதி லக்னத்தில் இருந்தால் சில சங்கடங்கள் தோன்றும் என்றாலும் ஆயுள் பலமுண்டு. மேஷ லக்னத்திற்கு செவ்வாய் லக்னாதிபதியாகவும், எட்டாமதிபதியாகவும் உள்ளார். எனவே செவ்வாய் நீசம்பெற்றால் உடல் ஆரோக்கியம் கெடும். மனக்கஷ்டம் இருக்கும். துலாம் லக்னத்திற்கு சுக்கிரன்தான் லக்னாதிபதியாகவும், எட்டாம் அதிபதியாகவும் இருக்கிறார். இவர் உச்சம்பெறுவது ஆறாமிடம் என்பதால் நோய்த்தாக்கம் அதிகரிக்கும்.
ரிஷபம் மற்றும் சிம்ம லக்னத்திற்கு குருதான் எட்டாமிட அதிபதி. இந்த ஜாதகங்களைப் பொருத்தவரை குரு நீசம் பெறாமல் இருப்பது நல்லது. குரு உச்சம் பெறாமல் இருப்பதும் நல்லது. அதுவே நீசம், உச்சம் பெற்றிருந்தால் சிறுவயதுமுதல் நோய்கள் வந்துகொண்டே இருக்கும். மிதுன லக்னத்திற்கும், கடக லக்னத்திற்கும் எட்டாம் அதிபதி சனி பகவான். இவர் நீசம், பகைபெறாமல் இருக்க வேண்டும். அப்படியிருந்தால் ஜாதகர் ஒருநிலையில் இருக்கமாட்டார். தவிர மூட்டுவலிலி, வயிற்றுவலி, மூலநோய் வரக்கூடும். தொற்றுநோய்கள் வராமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். விருச்சிகம், கும்ப லக்னத்திற்கு புதனே எட்டாமிடத்து அதிபதி. அவர் ஆட்சி, உச்சம் பெற்றால் ஜாதகருக்கு யோகம். அதுவே நீசம் பெற்றால் குடல் புண், ரத்த அழுத்தம் உண்டாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
கன்னி லக்னத்திற்கு செவ்வாய் எட்டாம் அதிபதியாக இருக்கிறார். இவர் மகரத்தில் உச்சம்பெறுவது நல்ல யோகப்பலனைத் தரும். நீண்ட ஆயுள் இருக்கும். மாறாக நீசம்பெற்றிருந்தால் ரத்த அழுத்தம், மூட்டுவலி, சர்க்கரை நோய், எலும்புத் தேய்மானம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும். தனுசு லக்னத்திற்கு எட்டாம் அதிபதி சந்திரன். அவர் ஆறாம் பாவகத்தில் உச்சம் பெறுவது யோகம் என்றாலும், ஜாதகர் மன நோயாளிபோல நடந்து கொள்வார். சந்திரன் நீசமானால் ஜாதகருக்கு முடக்குவாதம் ஏற்படும். மகர லக்னத்திற்கு சூரியன் எட்டாமிட அதிபதி. சூரியன் நாலாமிடமான மேஷத்தில் உச்சம் பெறலாம். ஆனால் 10-ஆமிடமான துலா ராசியில் இருந்திடல் கூடாது. அப்படி சூரியன் துலாமில் நின்றால் ஜாதகருக்கு தலைவலி, ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போவது, உடல் சோர்வு, நரம்புத் தளர்ச்சி, சரியான உறக்கம் இல்லாமை போன்றவை ஏற்படும். மீன லக்னத்திற்கு எட்டாமதிபதி சுக்கிரன். இவர் ஏழாமிடமான கன்னியில் நீசம் பெறுவது நன்மை தரும். மாறாக உச்சம் பெற்றால் அந்த ஜாதகருக்கு சர்க்கரை நோய், உடல் பருமன், தசைப்பிடிப்பு மற்றும் தொற்று நோய்களும் வரக்கூடும். சிறுவயதுமுதல் நெஞ்சில் சளி இருக்கும். இந்த நோய்கள் வருமென்றாலும் கீழுள்ள பரிகாரங்களைச் செய்து கொள்வதன்மூலம் சுபிட்சம் பெறலாம்.
பரிகாரம்- 1
எமதர்மராஜாதான் எட்டாம் அதிபதிக்குக் காரணமாவார். எனவே, "எமதர்மராஜாவே! எங்களைக் காப்பாற்று' என்று தினமும் ஒன்பதுமுறை சொல்லிலிவர, பரிபூரண ஆயுளோடு வாழலாம்.
பரிகாரம்- 2
வசதி படைத்தவர்கள் ஒருமுறையாவது திருக்கடையூர் சென்று மார்க்கண்டேயரையும், ஈசனையும், அமிர்தகடேசுவரரையும், அபிராமியையும் வணங்கி வர பரிபூரண ஆயுள் கிடைக்கும்.