Skip to main content

மங்கள வாழ்வுக்கொரு பங்குனிப் பௌர்ணமி! பங்குனி உத்திரம்- 30-3-2018

Published on 29/03/2018 | Edited on 30/03/2018


ங்குனி மாதம், உத்திர நட்சத்திரம் கூடிவரும் பௌர்ணமி நாள் பங்குனி உத்திரத்திருநாள். 12-ஆவது மாதமான பங்குனியும் 12-ஆவது நட்சத்திரமாகிய உத்திரமும் இணையும் நாள். இந்நாளில் தெய்வத் திருமணங்கள் பல நடந்துள்ளதால் இது மேலும் பன்மடங்கு சிறப்புக்கொண்ட நாளாகிறது. எனவே இந்த நாளை கல்யாண நோன்பு, கல்யாண விரத நாள் எனவும் புராணங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.

கன்னிப் பெண்கள் பங்குனி உத்திர நாளன்று கல்யாண விரதம் கடைப்பிடித்து, அன்று ஆலயங்களில் நடைபெறும் இறைவனின் மணக்கோலத்தை தரிசித்தால் விரைவில் திருமணம் கைகூடும்.

சில கோவில்களில் தீர்த்தவாரி நடைபெறும். அப்போது அந்தந்த தலங்களிலுள்ள கடல், ஏரி, ஆறு, குளம் போன்றவற்றில் புனித நீராடினால் பெரும் புண்ணியம் கிட்டும். திருவிளக்கு தீபத்தில் பங்குனி உத்திரத்தன்று சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாக எழுந்தருளியிருப்பதாக ஐதீகம்.

அன்று வயதுமுதிர்ந்த தம்பதி களுக்கு உணவிட்டு உபசரித்து வாழ்த்துப்பெற்றால், விரைவில் திருமணம் கைகூடும்.

பரமேஸ்வரனை பார்வதி கரம்பிடித்த நன்நாளிது. அன்று மதுரையில் மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் திருமண வைபவத்தை ஆண்டுதோறும் நடத்துவார்கள். முருகன் தெய்வானையை அன்றுதான் திருமணம் புரிந்துகொண் டார். வள்ளியின் அவதார தினமும்,

 

ram-sita
 


ஸ்ரீலட்சுமியின் அவதார தினமும் இதே நாள்தான். ஸ்ரீமகாலட்சுமி பங்குனி உத்திர விரதமிருந்துதான் திருமாலின் மார்பில் இடம்பிடித்தாள். பிரம்மன் தன் நாவில் சரஸ்வதியை வைத்துக்கொண்டதும் பங்குனி உத்திர தினம்தான்.ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்- ரங்கமன்னார் திருமண வைபவம் இந்த நாளில்தான் நடந்தது. காஞ்சியில் காமாட்சி- ஏகாம்பரேஸ்வரர் திருமண வைபவம் பங்குனி உத்திரத்தில்தான் நடைபெறும். அச்சமயம் அதேமண்டபத்தில் பலர் சுவாமி முன்னிலையில் திருமணம் புரிந்து கொள்வதை இன்றும் காணலாம்.

ராமபிரான்- சீதை, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- ஸ்ருதகீர்த்தி ஆகிய நான்கு ஜோடிகளும் மிதிலையில் ஜனகர் அரண்மனையில் ஒரே மேடையில் பங்குனி உத்திரத் தன்று திருமணம் செய்துகொண்டனர்.

 



காஞ்சி வரதராசப் பெருமாள்- ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார், பெருந்தேவித் தாயார் ஆகியோர், பெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஒன்றாகக் காட்சிதருவார்கள். பங்குனி உத்திரத்தன்று திருமழப்பாடியில் நந்திதேவர்- சுயம்பிரபை திருமணம் நடைபெற்றதும், சந்திரன் 27 கன்னியரை மணந்ததும் இதே நாளில்தான்.

சபரிமலை ஐயப்பன் அவதாரம், அர்ச்சு னன் பிறப்பு, காரைக்கால் அம்மையார் முக்திபெற்றது பங்குனி உத்திரத்தன்றுதான். சிவனின் தவத்தைக் கலைத்த காமனை நெற்றிக்கண்ணால் எரித்த ஈஸ்வரன், ரதிதேவியின் உருக்கமான வேண்டுகோளால் மன்மதனை பங்குனி உத்திரத்தன்றுதான் உயிர்ப்பித்து ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி செய்தார்.

திருவையாறு அருகேயுள்ள திங்களூர் ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று காலை 6.00 மணிக்கு சூரிய ஒளிக்கதிர் சிவலிங்கத்தின் மேல்படும். அதுபோல மறுநாள் மாலை 6.00 மணிக்கு சந்திரனின் ஒளிக்கிரணங்கள் சிவலிங்கத்தின்மேல் படும் அதிசயத்தைக் காணலாம். இதை தரிசிப்போரின் பாவங்கள் விலகும். அன்று தண்ணீர்ப் பந்தலமைத்து நீர் மோர், பானகம் வழங்கினால் வற்றாத வளம்பெறலாம். 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதமிருப்போருக்கு மறுபிறவியில்லை என்பர்.


 

lord murugan


 


முருகன் ஆலயமெங்கும் பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெறும். சிவாலயங்களிலும் இவ்விழா நடத்துவதைக் காணலாம். பழனியில் இவ்விழா பத்து நாட்கள் நடைபெறும். பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்துவருவார்கள். கொங்கு நாட்டு மக்கள் காவிரியின் கொடுமுடி தீர்த்தத்தை காவடியில் நிரப்பி, மகுடேஸ்வரரை வழிபட்டு, கால்நடையாக தீர்த்தக் காவடியுடன் பழனிவந்து தண்டாயுதபாணியை வழிபட்டுச் செல்வார்கள்.

கர்நாடகாவிலுள்ள மேலக்கோட்டை என்ற திருநாராயணபுரத்தில் பங்குனி பிரம்மோற்சவம் பத்து நாட்கள் நடைபெறும். அதில் வைரமுடி சேவை விழா ஆறாம் நாளான பங்குனி உத்திரத்தில் இரவு நடைபெறும்.

திருமால் தானே தோன்றிய நான்கு ஸ்வயம்வியக்த க்ஷேத்திரங்களில் நாராயணபுரம் ஒன்று. மற்றவை காஞ்சி, திருப்பதி, ஸ்ரீரங்கம் ஆகும். இதை காஞ்சி கொடையழகு, ஸ்ரீரங்கம் நடையழகு, திருப்பதி வடையழகு, மேலக்கோட்டை முடியழகு என்பர்.

இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட பங்குனி உத்திர நன்னாளில் இறைநினைவில் தோய்ந்து இன்புறுவோம்.

- இராதாபாய்