கரோனாவைக் கையாள்வதில் உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்வதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.
சீனாவின் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோடிக் கணக்கானவர்களைப் பாதித்துள்ளது. இதன் தாக்கம் பல்வேறு நாடுகளில் இன்னும் உச்சத்தில் இருக்கும் சூழலில், இதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கரோனாவைக் கையாள்வதில் உலக நாடுகள் சில ஆபத்தான பாதையில் செல்வதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.
ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம், "தேவையற்ற மரணங்களைத் தவிர்க்கவும், அத்தியாவசிய மருத்துவ சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், சரியான நடைமுறையைக் கையாள்வது அவசியம். கரோனா தடுப்பில் நாம் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். அடுத்த சில மாதங்கள் மிகவும் கடினமாக இருக்கும், சில நாடுகள் ஆபத்தான பாதையில் செல்கின்றன. தலைவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் தேவையற்ற மரணங்கள், அத்தியாவசிய சுகாதாரச் சேவைகள் சரிவடையாமல் தடுக்கவும், பள்ளிகள் மீண்டும் மூடப்படுவதைத் தடுக்கவும் சிறப்பாகச் செயல்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.