H1B விசாவை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் ட்ரம்ப்பின் முடிவு அமெரிக்காவின் வளர்ச்சியைப் பாதிக்கும் என அமெரிக்க வர்த்தக சபை எச்சரித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலால் தொழில்துறை முழுவதும் முடங்கியுள்ள சூழலில், கடந்த நான்கு மாதங்களில் அமெரிக்காவில் கோடிக்கணக்கானவர்கள் வேலையிழந்துள்ளனர். இந்த சூழலில் உள்நாட்டினருக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், H1B, H-2B, H-4, L-1, J-1 உள்ளிட்ட விசா வகைகளின் பயன்பாட்டை இந்த ஆண்டு இறுதி வரை அதிபர் ட்ரம்ப் தடை செய்துள்ளார். அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கான இந்த விசாவில் சுமார் 74 சதவீதம் வரை இந்தியர்கள் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில் இதனால் பயன்பெறும் லட்சக்கணக்கான இந்தியர்களும், அவர்களை நம்பியுள்ள அமெரிக்க நிறுவனங்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
ட்ரம்ப்பின் இந்த முடிவுக்குப் பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் சூழலில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வர்த்தக சபையின் தலைமை நிர்வாக அதிகாரி டாம் டோனோஹூ வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் பாதிப்பால் சரிவை சந்தித்துள்ள நமது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக, விசா கட்டுப்பாடுகளை கொண்டுவருவது நாட்டிற்கு உதவாது. அது நாட்டின் வளர்ச்சியை குறைப்பதுடன் வேலைவாய்ப்பையும் குறைக்கும். விசா கட்டுப்பாடு மூலம் பொறியாளர்கள், நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற தொழிலாளர்களுக்கு வரவேற்பு இல்லை என்ற அடையாளத்தை முன்னிலைப்படுத்துவது நம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது, அது நம்மை தடுத்து நிறுத்தும். நமது நாட்டின் குடிபெயர்வு அமைப்பில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள், வெளிநாடுகளில் முதலீடு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை பாதிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.