அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை வீழ்த்தி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவையான நிலையில் பைடன் 290 தேர்தல் சபை வாக்குகள் பெற்றார். ஜோ பைடனை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் 214 தேர்தல் சபை வாக்குகளை பெற்று தோல்வியைடைந்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதன் மூலம் துணை அதிபராக கமலா ஹாரிஸ் வென்றுள்ளார்.
அமெரிக்க நாட்டின் 46- வது அதிபராக ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார். அதேபோல் துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவியேற்கவுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு உலக நாட்டு தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜோ பைடன், கரோனா காலத்திலும், கட்சிக்காகவும், வெற்றிக்காகவும் உழைத்தவர்களுக்கு நன்றி. ஒரு அதிபராக நான் மக்களைப் பிளவுபடுத்த மாட்டேன்; அனைவரையும் ஒன்றிணைப்பேன் என உறுதிமொழி அளிக்கிறேன். ஒரு தெளிவான வெற்றி; ஒரு திருப்திகரமான வெற்றி; இது மக்களுக்கான வெற்றி. இதுவரை பெறாத வெற்றியை நாம் பெற்றுள்ளோம். எந்த பேதமும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் நம்மை ஆதரித்திருக்கிறார்கள். நாட்டு மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக முழு மனதுடன் பணியாற்றுவேன். குடிபெயர்ந்த பெண்ணின் வாரிசான கமலா ஹாரிஸ் முதன் முறையாக துணை அதிபராக தேர்வானதற்கு வாழ்த்து.
கட்டமைப்பதற்கும், விதைப்பதற்கும், அறுவடைக்கும் ஒரு காலம் இருக்கிறது; இது ஆற்றுப்படுத்துவதற்கான காலம். கரோனாவை கட்டுக்குள் கொண்டு வராமல் பொருளாதாரம் உள்ளிட்டவற்றை நம்மால் மீட்க முடியாது. குற்றஞ்சாட்டுவதை விட்டுவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. எதிராளிகளை விரோதிகளாக கருதும் போக்கு முடிவுக்கு வர வேண்டும்; இணைந்து செயல்பட ட்ரம்புக்கு ஜோ பைடன் அழைப்புக்கு விடுத்துள்ளார்.