ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும் நேட்டோ அமைப்புடன் உக்ரைன் இணைவதில் உறுதியாக இருந்து வந்தது. இதையடுத்து உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இன்று வரை போர் நடந்து வருகிறது. ரஷ்யா உக்ரைனில் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் நிலையில், உக்ரைன் நாட்டு மக்கள் லட்சக்கணக்கானோர் அந்நாட்டை விட்டு வெளியேறினார்கள். இந்த போரில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் உக்ரைன் - ரஷ்யா இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 2 கட்டடங்கள் சேதம் சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவிக்கையில், “ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்று அதிகாலை 3 மணியளவில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 டிரோன்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளன. தாக்குதலில் ஈடுபட்ட ஒரு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. மற்ற இரு டிரோன்களும் மின்னணு ஆயுதங்கள் மூலம் தடுக்கப்பட்டன. இந்த டிரோன்கள் மாஸ்கோவில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீது மோதியுள்ளது. இந்த தாக்குதலில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை” எனத் தெரிவித்துள்ளது.