அமெரிக்காவில் சிறுமி ஒருவர் விமானத்தை திருடிய சம்பவம் பரபரப்பை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யோஸ்மெட் விமானநிலையத்தில் நேற்று ஓடுபாதையில் நிறுத்தியிருந்த விமானம் பயணிகள் யாரும் இல்லாத சமயத்தில் அங்கிருந்து நகர்வதை பாதுகாப்பு அதிகாரிகள் கவனித்துள்ளார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து விமானத்தை நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் அதிகாரிகள் மேற்கொண்டனர். ஆனால் விமானம் தொடர்ந்து முன்னேறிய நிலையில், எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கட்டடத்தின் மீது மோதியுள்ளது. உடனடியாக சுதாரித்த காவலர்கள் விமானத்துக்குள் ஏறியுள்ளனர். விமானத்தின் ஓட்டுநர் இருக்கையை பார்த்த அவர்கள் அதில் 15 வயது சிறுமி உட்கார்ந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர் விளையாட்டாக விமானத்தை இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் எப்படி விமானத்துக்குள் வந்தார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.