இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. பால், மாவு போன்ற உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைக்காததால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூட்டணிகளின் கோரிக்கை, மக்களின் தொடர் போராட்டம் காரணமாக ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவையில் பதவி வகித்து வந்த அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அமைச்சர்களின் ராஜினமா கடிதத்தை ஏற்று, அனைத்துக் கட்சிகள் அடங்கிய காபந்து அரசு அமைக்க கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்திருந்த நிலையில்,இன்று நான்கு அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அமைச்சரவை பதவியேற்றது.
இந்நிலையில் நாளை காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூட இருக்கிறது. இலங்கை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி திரும்பப் பெற்றுள்ள நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அரசின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 150 பேர் இருக்கும் நிலையில் அதில் 40க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தன்னிச்சையாக இயங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மக்களின் போராட்டம், எதிர்க்கட்சிகளின் வாதம் போன்றவை என்னமாதிரியான தாக்கத்தை இலங்கை அரசியலில் ஏற்படுத்தும் என்பது நாளைய நாடாளுமன்ற கூட்டத்திற்கு பின் தெரிவரும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.