ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் சொகுசு கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றிச் சென்ற ஃபெலிசிட்டி ஏஸ் என்ற சரக்கு கப்பலில், தீப்பற்றி எரிந்து வருகிறது. அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசோர்ஸ் தீவுகள் அருகே கடந்த புதன்கிழமையன்று மதியம் சென்றுகொண்டிருந்தபோது இக்கப்பலில் தீப்பற்றியுள்ளது.
இதனைதொடந்து கப்பலில் இருந்த 22 பேர் போர்த்துகீசிய கடற்படை மற்றும் விமானப்படை உதவியுடன் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் கப்பல் பற்றி எரியும் நிலையிலேயே கடலில் அலைந்துகொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தீ விபத்து ஏற்பட்டுள்ள கப்பலில் 3,965 ஃபோக்ஸ்வேகன் குழும கார்கள் இருந்ததாகவும், அதில் ஃபோர்ஷே, அவ்டி மற்றும் லேம்போர்கினி கார்களும் அடங்கும் என அமெரிக்காவில் உள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இ-மெயில் ஒன்று தெரிவிப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.
ஏற்கனவே கிராண்டே அமெரிக்கா என்ற கப்பலில் 2019 ஆம் ஆண்டு தீப்பிடித்தபோது, அந்த கப்பலோடு அதில் இருந்த 2000 சொகுசு கார்கள் கடலில் மூழ்கியது என்பது குறிப்பிடத்தக்கது.