கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில், மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண திட்டம் ஒன்றை அந்நாட்டு அரசு உருவாக்கியது. அதன்படி, மக்களுக்கு 900 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.66 லட்சம் கோடி) நிவாரணத்தொகையாக ஒதுக்கீடு செய்ய அந்நாட்டின் நாடாளுமன்றம் அண்மையில் ஒப்புதல் அளித்தது. குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி என இரு கட்சியினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவின்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 600 டாலர்கள் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, அதிபர் ட்ரம்ப் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் டிரம்ப்போ,"இந்த மசோதா முற்றிலும் தேவையற்ற அம்சங்களை கொண்டுள்ளது. கரோனாவுடன் போராடிவரும் அமெரிக்கர்களுக்கு இதனால் குறைவான உதவியே கிடைக்கும். எனவே இந்த மசோதாவில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும்" என கூறி மசோதாவில் கையெழுத்திட மறுத்து வந்தார்.
இதனால் அமெரிக்க மக்களுக்கு நிவாரணம் கிடைப்பது தாமதமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர். எதிர்ப்புகள் அதிகரித்த நிலையில் தற்போது டிரம்ப், கரோனா நிவாரண மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார்.
கரோனா மசோதாவில் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கியுள்ள ட்ரம்ப், மசோதாவில் தேவையற்ற அம்சங்களை நீக்கவேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில், கையெழுத்திடுவதாகவும், நீக்க வேண்டிய அம்சங்கள் குறித்த குறிப்பை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பேன் எனவும் கூறியுள்ளார்.