ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (வயது 67), மேற்கு ஜப்பானில் உள்ள நாரா எனும் இடத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே சரிந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை உடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டு, நாரா மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் சுடப்பட்டது உலக நாடுகளின் தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நிலையில், அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவையைத் தொடர வேண்டும் என்றும், இறைவனை பிரார்த்திப்பதாகவும் உலக நாடுகளின் தலைவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ஜப்பான் பிரதமர் பிமியோ கிஷிடோ, "ஷின்சோ அபேவைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவரின் உடல்நிலைக் கவலைக்கிடமாக உள்ளது. அபேவை துப்பாக்கியால் சுட்டது காட்டுமிராண்டித்தனமான செயல்; இதை ஏற்றுக் கொள்ள முடியாது" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஷின்சோ அபேவைத் துப்பாக்கியால் சுட்ட நபரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர், அவர் வைத்திருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஜப்பான் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.