சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலையாக அராம்கோ நிறுவனத்தின் மீது சமீபத்தில் ஆளில்லா விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டன. இந்த ஆள் இல்லா விமானத் தாக்குதலில் அந்த ஆலை கடுமையாக சேதமடைந்ததை அடுத்து, அங்கு கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டது. மேலும் இந்த தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்று சவுதி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்தநிலையில் ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு விளைவுகளை உலகம் சந்திக்க வேண்டி வரும் என சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், "ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையான மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உலக நாடுகளின் நலன்களை அச்சுறுத்தும் வகையில், இந்த பிரச்சனை விரிவடையும். எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு பெட்ரோலிய பொருட்களின் விலை உயரக் கூடும். நமது வாழ்வில் இதுவரை கண்டிராத மற்றும் கற்பனை செய்து பார்த்திராத வகையில் இந்த விலை உயர்வு இருக்கும். மேலும் இப்படி ஒருநிலை ஏற்பட்டால் ஒட்டு மொத்த உலக நாடுகளின் பொருளாதாரமும் ஸ்தம்பித்துவிடும்" என்று முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.