தென் கொரிய அதிபர் யூன் சுக் யீயோல் கடந்த 3ஆம் தேதி இரவு அந்நாட்டில் திடீரென அவசரநிலை ராணுவச் சட்டத்தை அறிவித்தார். நாட்டின் நிர்வாகத்தை எதிர்க்கட்சிகள் குறுக்கீடு செய்வதாகவும், வடகொரியாவுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும், எதிர்நிலை செயல்பாடுகளை ஊக்குவிப்பதாகவும் குற்றம் சாட்டி அந்நாட்டு அதிபர், அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார். தென் கொரியா அதிபரின் இந்த திடீர் அறிவிப்பு, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 190 பேர் இந்த ராணுவச் சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களித்தனர். அதன் பேரில், இந்த சட்டம் செல்லாது என்று கூறி, சபாநாயகர் இந்த சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.
அடுத்த நாளான 4ஆம் தேதி அதிகாலை, இந்த அவசரநிலை ராணுவச் சட்டத்தை திரும்ப பெறுவதாக அந்நாட்டு அதிபர் யூன் சுக் யீயோல் அறிவித்தார். நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற ராணுவப் படைகள் திரும்பப் பெறப்பட்டது. இதனால், அங்கு இயல்பு நிலை திரும்பியது. நள்ளிரவில் திடீரென்று, ராணுவநிலை அவரச சட்டம் அமல்படுத்தியதற்கு தென் கொரிய அதிபர் யூன் சுக் யீயோல் பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டங்கள் நடத்தினர்
மேலும், தென் கொரிய அதிபர் யூன் சுக் யீயோல் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில், தீர்மானத்தின் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த விவாதத்தின் போது பேசிய யூன் சுக் யீயோல், ராணுவநிலை அவசர சட்டத்தை அமல்படுத்தியதற்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார். அப்போது நடந்த வாக்கெடுப்பில், ஆளும் கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதனால், அந்த வாக்கெடுப்பு நிறைவேற்றப்படாமல் போனது.
இந்த நிலையில் , இன்று மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில், 300 பேர் கொண்ட உறுப்பினர்களில், 204 பேர் அதிபரின் பதவி நீக்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். 85 பேர் எதிராக வாக்களித்தனர். 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக ஆகின. மூன்றில் இரண்டு பங்கு அதிபர் பதவி நீக்கத்திற்கு ஆதரவு அளித்ததால், பெரும்பான்மை கிடைத்த பட்சத்தில் இந்த தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் யூன் சுக் யீயோல், பதவி நீக்கம் செய்யப்பட்டார்.