சேலம் சென்னை எட்டு வழிச்சாலையை அமைக்க மத்திய பாஜக அரசும், தமிழ்நாட்டு அதிமுக அரசும் முடிவு செய்துள்ளதை கண்டித்து லண்டனில் இந்திய தூதரகம் முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
லண்டன் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தினர் ஒருங்கிணைக்க, தமிழ் தோழமை அமைப்பும், ஐக்கிய ராச்சிய தமிழ் மக்கள் அமைப்பும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டம், லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன்னிலையில் நடைபெற்றது.
மக்களின் பொதுச் சொத்தை சூறையாட வழிகோலுகிற, மக்கள் விரும்பாத, மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கிற, மக்களின் நிலத்தை பறிக்கிற, மக்களின் வரிப்பணத்தை பெற்று மக்களின் ஊழியராக இயங்கும் அரசாங்கம், கார்ப்பரேட் ஊழலுக்கு வழிவகுத்திடும் இந்த எட்டு வழிச் சாலை திட்டத்தை உடனடியாக கைவிடக் கோருகிறோம்.
மக்களாட்சியில் பேச்சுரிமை என்பது அடிப்படை. எட்டு வழிச்சாலை அமைக்க ஜனநாயக வழியில் இதுவரையில் போராடிய பல தோழர்களை கைது செய்த தமிழக அதிமுக அரசை வண்மையாக கண்டிக்கிறோம். கைது செய்யப்பட்ட தோழர்களை விடுதலை செய்யவும், அவர்கள் மேல் போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெறவும் வலியுறுத்துகிறோம்.
அதே போல, இந்த எட்டு வழிச்சாலை திட்டத்தை ஆதரித்து வளர்ச்சிக்கு எதிராக செயல்படும், மத்திய பாஜக அரசையும், மாநில அதிமுக அரசையும், திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் போன்றவர்களையும் வண்மையாக கண்டிக்கிறோம் என அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.