அமெரிக்காவில் முதியவர் ஒருவரை போலீஸார் தள்ளிவிட்டதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் இரு போலீஸார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சக போலீஸார் 57 பேர் கூட்டாக ராஜினாமா செய்துள்ளனர்.
அமெரிக்காவின் மினசொட்டாவில் கள்ளநோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணை ஒன்றின் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட்டின் இறப்பிற்கு நீதி கேட்டும், கறுப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தியும் அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன. கடந்த பத்து நாட்களாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கலவரங்களைக் கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
அந்த வகையில், அமெரிக்காவில் கலவர தடுப்பு போலீஸார் குழு ஒன்று ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களிடம் கேள்வி எழுப்பிய 75 வயது முதியவர் ஒருவரை சில போலீசார் கண்மூடித்தனமாகக் கீழே தள்ளிவிட்டனர். இதில் சாலையில் விழுந்த அந்த முதியவருக்கு மண்டை உடைந்து அதிகளவு ரத்தம் வெளியேறியது. ஆனால், இதனைப் பார்த்தும் அந்த முதியவருக்கு உதவி செய்யாமல் காவல்துறையினர் நகர்ந்து சென்றனர். இந்த விவகாரம், அந்நாட்டில் போலீஸார் மீதான எதிர்ப்பை அதிகப்படுத்தியது. அதனையடுத்து, முதியவரைக் கீழே தள்ளிவிட்ட இரண்டு காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்தது அரசு. ஆனால், அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த இரு காவலர்களுடன் பணியாற்றும் 57 காவலர்கள் கூட்டாகப் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனிடையே காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதியவர் குணமடைந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.