விமானத்தில் பயணிப்போர் பலருக்கும் கடினமான ஒரு விஷயம், விமான நிறுவனம் அறிவித்துள்ள எடைக்குள்ளான லக்கேஜுகளை எடுத்து செல்வதே. அந்த வகையில் அதிக அளவில் இருந்த தனது பையின் எடையே குறைக்க இளம்பெண் ஒருவர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோட்ரிக்ஸ் என்ற இளம்பெண், கடந்த 1ஆம் தேதி விமானத்தில் பயணம் செய்ய விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது அவர் கொண்டு வந்த உடமையின் எடை 9 கிலோ இருந்துள்ளது. ஆனால் பையில் உள்ள உடைமைகள் எடை 7 கிலோவுக்குள் இருக்க வேண்டும், இல்லையெனில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்த உடைகளை வெளியே எடுத்த அவர், ஒன்றன் மீது ஒன்று அணிந்துகொண்டுள்ளார். இதுபோல செய்து பையின் எடையை 6.5 கிலோவிற்கு கொண்டுவந்துள்ளார். இதன்மூலம் கூடுதல் கட்டணம் செலுத்துவதிலிருந்து அவர் தப்பித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி உள்ளதோடு, பலத்த சிரிப்பலையையும் ஏற்படுத்தி வருகிறது.