அமெரிக்காவின் பைசர் நிறுவனம் கண்டறிந்துள்ள கரோனா தடுப்பூசியை தகுந்த பராமரிப்பு வெப்பநிலையில் வைப்பது வெப்ப மண்டல நாடுகளுக்குச் சிக்கலாக அமையலாம் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்து 90 சதவீதம் வரை பலன் அளிப்பதாக அண்மையில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தடுப்பு மருந்தானது அடுத்த மாதம் உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த தடுப்பூசியை தகுந்த பராமரிப்பு வெப்பநிலையில் வைப்பது வெப்ப மண்டல நாடுகளுக்கு சிக்கலாக அமையலாம் எனக் கூறப்படுகிறது. பைசர் கண்டறிந்துள்ள இந்த தடுப்பு மருந்து -70 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் பாதுகாக்கப்பட வேண்டும்.
குளிர் தேசங்களான மேற்கத்திய நாடுகளில் இவ்வெப்பநிலையில் இந்த மருந்தினை பாதுகாப்பது எளிது. அதேநேரம், ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற வெப்பமண்டல பகுதிகளில், குறிப்பிட்ட இந்த வெப்பநிலையில் இம்மருந்தினை பாதுகாப்பது சவாலான காரியமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், -70 டிகிரி செல்சியஸில் மருந்துகளைப் பாதுகாக்கும் சாதனங்களை ஒவ்வொரு நாட்டின் மூலைமுடுக்கில் உள்ள மருத்துவமனைகளுக்கும் கொண்டு செல்வது கடினமானதாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த பாதுகாப்பு வெப்பநிலை சிக்கல் பைசர் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.