கரோனா தொற்று நமது நாட்டில் பெருந்தொற்றாக இல்லாத சூழலில், ஏன் இவ்வளவு பணத்தை அதற்காக செலவழிக்கிறீர்கள் என பாகிஸ்தான் அரசுக்கு, அந்நாட்டு உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பி உள்ளது.
பாகிஸ்தானில் கரோனா வைரஸ் காரணமாக இதுவரை 43,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 939 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டில் சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் வார இறுதி நாட்களில் மட்டும் மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில், அரசின் ஊரடங்கு நடவடிக்கையால் வணிகர்கள் பாதிக்கப்படுவதாக அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "அரசின் இந்த நடவடிக்கையால் மக்கள் கரோனாவுக்கு முன்னரே பட்டினியால் இறந்துவிடுவார்கள் போல உள்ளது. கரோனா வைரஸ் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எங்கும் செல்வதில்லை. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சந்தைகளை மூடி வைப்பதற்கு என்ன காரணம்? வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகள் வாரத்தில் ஏழு நாட்கள் திறந்திருக்க நீதிமன்றம் அனுமதியளிக்கிறது" என தெரிவித்தனர். மேலும் பாகிஸ்தானில் கரோனா பரவல் பெருந்தொற்றாக இல்லாத சூழலில் ஏன் இவ்வளவு பணத்தை அதற்காக செலவழிக்கிறீர்கள் எனவும் அரசுக்கு நீதிமன்றம் கேள்வியெழுப்பி உள்ளது.