உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்திலிருந்த நிலையில் படிப்படியாக பாதிப்புகள் குறைந்து ஊரடங்கு அறிவிப்புகள் பின்வாங்கப்பட்டு வருகிறது. அதேபோல் நாடுகளுக்கு இடையேயான விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளது. தடுப்பூசி என்ற ஆயுதத்தின் மூலம் இவை சாத்தியமாகி கொண்டிருக்கும் நிலையில் வடகொரியாவில் முதல் முறையாக நேற்று ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். காய்ச்சலால் 6 பேர் இறந்த நிலையில் முதன்முறையாக உறுதி செய்யப்பட்ட கரோனா தொற்று ஒமிக்ரான் வகையை சேர்ந்தது என்பதும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே கரோனா தொற்று பரவலை தடுக்க வடகொரியா தனது எல்லைகளை மூடியதால் உணவு பஞ்சத்தில் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இன்று வடகொரியாவில் பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கரோனா தொற்றால் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மட்டும் வடகொரியாவில் 18 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் இருப்பது உறுதியான நிலையில், 1,87,800 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்திலும் அடுத்தடுத்த 3 ஏவுகணை சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டது கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலையை உருவாகியுள்ளது. வடகொரியாவின் தலைநகர் அருகே உள்ள ரகசிய இடத்தில் 3 ஏவுகணைகள் கிம் ஜாங் உன் அனுமதியுடன் சோதிக்கப்பட்டது. அந்த மூன்று ஏவுகணைகளும் கடல் பகுதியில் விழுந்ததாக தென்கொரியா அறிவித்துள்ளது.