தென் அமெரிக்க நாடான பிரேசிலில், கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும், 4195 பேர் கரோனாவிற்கு பலியானார்கள். நேற்று (07.04.2021) கரோனாவால் பாதிக்கபட்ட 3,829 பேர் உயிரிழந்தனர். மேலும் நேற்று ஒரேநாளில் 92,625 பேருக்கு கரோனா உறுதியானது.
தொடர்ந்து நாடு முழுவதும் கரோனா அதிகரித்து வருவதால், தேசிய அளவிலான ஊரடங்கை அமல்படுத்தவேண்டும் என பிரேசிலில் கோரிக்கை எழுந்துள்ளது. இருப்பினும் அதற்கு அதிபர் ஜெய்ர் போல்சனோரோ மறுப்பு தெரிவித்து வருகிறார். மேலும் தேசிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்தப்படாது எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "வீட்டில் இருந்துகொண்டு, மற்ற அனைத்தையும் மூடிவிடுங்கள் என்ற அரசியலை நாங்கள் ஏற்கமாட்டோம்" என அவர் கூறியுள்ளார். அதிபரின் இந்த முடிவால், பிரேசிலில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெய்ர் போல்சனோரோ கரோனாவின் முதல் அலையின்போதே ஊரடங்கை அமல்படுத்த தீவிரம் காட்டவில்லை. இதனையடுத்து அங்கு லட்சக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதுவரை பிரேசிலில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கரோனவால் உயிரிழந்துள்ளனர் என்பதும், ஜெய்ர் போல்சனோரோ கரோனாவை சாதாரண சிறிய ஃப்ளூ எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.