
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் மக்கள் தங்களது பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம் என அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் அனுமதி வழங்கியுள்ளது. இது போன்ற வளர்ந்த நாடுகளில் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களே துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு வந்து உடன் படிக்கும் மாணவர்களையோ அல்லது தான் விரும்பாதவர்களையோ துப்பாக்கியால் சுடும் நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தும்.
அந்த வகையில், ஆயுள் காப்பீட்டு ஊழியர் ஒருவர் அவரது குடும்பத்தினரை மொத்தமாக சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் ஈனாக் நகரைச் சேர்ந்தவர் மைக்கில் ஹெய்ட். 42 வயதான மைக்கேல் ஹெய்ட் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் டவுஷா (40). இத்தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுடன் டவுஷாவின் தாயார் கெய்ல் எரால் என்பவரும் வசித்து வருகிறார்.
குழந்தைகள் அனைவரும் 4 முதல் 17 வயதிற்கு உட்பட்டவர்கள். அனைவரும் அருகில் இருந்த பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில், ஹெய்டுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த டவுசா கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்து கணவர் மைக்கிலிடம் விவாகரத்து கேட்டுள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஹெய்ட் கடந்த புதன் அன்று மனைவி, மாமியார் மற்றும் ஐந்து குழந்தைகள் உள்ளிட்ட ஏழு பேரையும் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின் அவரும் தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.